

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் இலவச பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளில் நேற்று வழங்கப்பட்டது. ஆளுங் கட்சியினரின் தலையீடு அதிகம் இருந்ததால், பொங்கல் பொருட்கள் பெற வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதை நேற்று முன்தினம் மாலை அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கிவைத்தார். இதையடுத்து நேற்று காலை 10 மணிமுதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் காலை 9 மணிக்கே ரேஷன் கடைகள் முன் காத்திருந்தனர். ஆனால், 10 மணியான பிறகும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவில்லை. காரணம் கேட்டவர்களிடம், ஆளுங் கட்சியினர் வந்து தொடக்கிவைத்த பின்புதான் பொருட்களை தர வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் நகரில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் முன்னாள் மேயர் மருதராஜ் தலைமையிலான முன்னாள் கவுன்சிலர்கள், அதிமுக பிரமுகர்கள் பங்கேற்று பொங்கல் பொருட்களை வழங்கிய பிறகே பொதுமக்களுக்கு விநி யோகிக்கப்பட்டது.
மருதராஜ் தலைமையிலானோர் வரும் வரை நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். முதியோர், பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
பெண் ஊழியருடன் தகராறு
பழநி தேவாங்கர் தெருவில் உள்ள 7-ம் எண் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி காலை 10 மணிக்கு தொடங்கியது.
தகவலறிந்து அங்கு சென்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர் வாகிகள் சிலர் நாங்கள் இன்றி எப்படி பொங்கல் பொருட்களை விநியோகம் செய்யலாம் என, அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிமுகவினர் அங்கிருந்து வெளியேறினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் ஆளுங்கட்சியினர் தலையீட்டால் பொங்கல் பொரு ட்கள் பெறுவதில் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
பழநியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்.
பதவிக்காலம் முடிந்தும் மாறாத தோரணை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தபின்பும், தாங்கள் இன்னமும் பதவியில் இருப்பதாக கருதி ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்படுவது தொடர்கிறது.
அரசு விழாக்களை தாங்களே நடத்துவதுபோல் எந்த ஒரு அரசு அலுவலர் இன்றியும், அரசு பிரதிநிதிகள் இன்றியும், தாங்களாகவே முன்னின்று அனைத்து ரேஷன்கடைகளுக்கும் சென்று இலவச பொருட்களை வழங்குவதில் நேற்று ஆர்வம் காட்டினர்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “எங்களின் உயர் அதிகாரிகளே அமைதியாக இருக்கும்போது, நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களால் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கையை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்” என வேதனையுடன் குறிப்பிட்டனர்.