

தமிழகத்தில் முதல்வர் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து மக்களிடம் அதிமுக விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வறட்சியால் பாதிக்கப்பட் டுள்ள விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை உடைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டதைப்போலவே, சிவகாசி பட்டாசுத் தொழிலுக்குத் தடை கோரும் வழக்கையும் தமிழக அரசு எதிர்கொண்டு அந்த தொழிலையும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.
வார்தா புயலாலும், வறட்சியா லும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததைக் கண்டித்து பிப்.20-ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மாற்றப்பட்டதற்கும், அதற்குப் பதிலாக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்குமான காரணத்தை மக்களிடம் அதிமுக விளக்க வேண்டும்.
புதிய முதல்வராகப் பொறுப் பேற்க உள்ள சசிகலாவின் செயல்பாடுகளையும், மக்களின் எண்ணங்களும் அடுத்த 6 மாதத்தில் அவர் சந்திக்க உள்ள தேர்தல் மூலம் தெரியவரும். யார் வந்தாலும் மக்களுக்கு நல்லாட்சி செய்ய வேண்டும். குடும்ப ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.