

பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் கடந்த 7 ஆண்டுகளில் 84 பெண் தொழி லாளர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்று கல்வி உரிமை மேம்பாட்டு மைய ஒருங் கிணைப்பாளர் கருப்பசாமி தெரிவித்தார்.
பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் முகாம் தொழிலாளர் முறையில் பணியாற்றும் பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை பாது காப்பதற்கான சட்ட கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. கல்வி உரிமை மேம்பாட்டு மையம் மற்றும் திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் மாநில குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் எஸ். செல்வகுமார் பேசியதாவது:
பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை மீட்பதில் சட்ட ரீதியாக பிரச்சினைகள் உள்ளன. 14 வயதுக்குட்பட்டவர்களை தொழிற்சாலைகளில் நியமிக்கக் கூடாது என சட்டம் கூறுகிறது. அதேநேரத்தில், 14 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் போதுமானதாக இல்லை. போலி ஆவணங்களை வைத்து குழந்தை தொழிலாளர்களின் வயதை உயர்த்திக் காட்டுகின்றனர்.
எல்லோருக்கும் உயர் கல்வி அளிப்பதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும். 18 வயதுள்ள அனைவருக்கு உயர் கல்வி கிடைக்கச் செய்வதை கட்டா யப்படுத்த வேண்டும். அப்போது தான் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை குறையும். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.
கல்வி உரிமை மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் கருப்ப சாமி பேசும்போது, ‘‘பஞ்சாலை களில் பணிபுரியும் பெண் தொழி லாளர்களில் 80 சதவீதம் பேர் தலித்துகளாக உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொத்தடிமை போல் நடத்தப்படுகின்றனர். கடந்த 2007 முதல் தற்போது வரை 84 பெண் தொழிலாளர்கள் நூற்பாலைகளில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இது தொடர்பான வழக்குகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. பஞ்சாலை தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பொது நல வழக்கு தொடர உள்ளோம்’’ என்றார்.
கருத்தரங்கில் இங்கிலாந்து தலித் ஒருமைப்பாடு நெட்வொர்க் அமைப்பின் தலைவர் மீனா வர்மா மற்றும் பஞ்சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.