Published : 13 Aug 2016 08:43 AM
Last Updated : 13 Aug 2016 08:43 AM

நீர்நிலைகள், தடுப்பணைகள் ரூ.153 கோடியில் சீரமைக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு ஆறு, ஏரி, கால்வாய்கள், தடுப்பணை கள் ரூ.153 கோடி செலவில் சீரமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு அறிவிப்பு களை வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் மிக முக்கிய அணையான மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கரை, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த கால்வாய்கள் வெட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் முறையாக செல்வதில்லை. இப்பிரச்சி னையை தீர்க்க கடந்த 5 ஆண்டுகளில் 2 கால்வாய்களிலும் ரூ.79.60 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாயின் எல்எஸ் 45.30 கி.மீ. முதல் எல்எஸ் 58 கி.மீ. வரை ரூ.25 கோடியில் சீரமைக்கப்படும். சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் மேற்கு கரை கால்வாயின் எல்எஸ் 7.283 கி.மீ முதல் எல்எஸ் 13.92 கி.மீ. வரை ரூ. 25 கோடியில் சீரமைக்கப்படும். இதன்மூலம் இக்கால்வாய்களில் தண்ணீர் கசிவு தடுக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்லும்.

காளிங்கராயன் வாய்க்கால்

பவானி ஆற்றின் குறுக்கே உள்ள காளிங்கராயன் அணைக் கட்டு மற்றும் வாய்க்கால் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது. 56 மைல் தூரம் உள்ள இந்த வாய்க்கால் கடந்த 5 ஆண்டு களில் ரூ. 91 கோடியில் சீரமைக் கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகருக்குள் செல்லும் இந்த வாய்க்காலின் பகுதிகளில் கான்கிரீட் லைனிங், பேபி வாய்க் கால் அமைக்கும் பணிகள் ரூ.36.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்தும், தோல், சாயப்பட்டறைகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், காளிங்க ராயன் வாய்க்காலில் கலப்பது தடுக்கப்படும். தண்ணீர் கசிவது தடுக்கப்படுவதால் கடைகோடி விவசாயிகளும் பயன்பெறு வார்கள்.

6 அணைக்கட்டுகள்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் சரபங்கா நதி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி வழியாக 80 கி.மீ ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் குறுக்கே உள்ள 21 அணைக் கட்டுகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. ஓமலூர், எடப் பாடி பகுதிகளில் உள்ள 13 அணைக் கட்டுகள் கடந்த ஆண்டு ரூ.5.23 கோடியில் சீரமைக்கப்பட்டன. ஓமலூர், சேலம் மேற்கு பகுதிகளில் உள்ள 6 அணைக்கட்டுகள், அதன் கால்வாய்கள் மற்றும் 10 ஏரிகள் இந்த ஆண்டில் ரூ.15 கோடியில் சீரமைக்கப்படும். இதனால் வெள்ள நீர் முழுமையாக சேமிக்கப்பட்டு ஏரிகளுக்கு திருப்பப்படும்.

வராக நதிக்கு ரூ.15 கோடி

வைகை ஆற்றின் பிரதான கிளை ஆறான வராக நதியை சீர்செய்து, தூய்மைப்படுத்தும் வகையில் ரூ.15 கோடியில் ஆற்றின் இருபுறமும் வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்து கரைகள் பலப்படுத்தப்படும். இதன்மூலம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும். ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்.

வைகை ஆற்றில் தடுப்பணை

மழை காலங்களில் வரும் வெள்ள நீரை சேமிக்க சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும். இதன்மூலம் மழை நீர் சேமிக்கப்பட்டு, கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான கிணறுகளில் நீர்மட்டம் உயரும். பாசன நிலங்களும் பயன்பெறும்.

49 ஏரிகள் சீரமைப்பு

ஏரிகளை மேம்படுத்தும் பணி களுக்கு அதிமுக அரசு முக்கியத் துவம் அளித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு குடிநீர் ஆதாரமும், விவசாய உற் பத்தியும் பெருகும். திருவண்ணா மலை மாவட்டத்தில் 8, தருமபுரி 7, வேலூர் 12, விருதுநகர் 22 என 49 ஏரிகள் ரூ.22 கோடியே 83 லட்சம் செலவில் புனரமைக்கப்படும். இதன்மூலம் 3,789 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

திருச்சியில் உள்ள பொதுப் பணி பணியாளர் பயிற்சி நிலைய அலு வலகம் 60 ஆண்டு பழமையான கட்டிடத்தில் 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிலையத்துக்கு விரிவுரையாளர் அரங்கம், பல்நோக்கு அரங்கம் உள்ளடக்கிய புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பொதுப்பணித் துறையில் மொத்தம் ரூ.153 கோடியே 8 ஆயிரத்துக்கான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x