

கதை அமைக்கையில் கதாசிரியரும், இயக்குகையில் இயக்குநரும் மனதில்கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் 'தாக்கம்'.
தன் படைப்பு ரசிகருக்கு எவ்வித தாக்கத்தை உண்டாக்கப்போகிறது என்பதை படம் துவங்குமுன் அறுதியிட்டு முடிவு செய்ய வேண்டுவது இயக்குநரின் கடமை.
தாக்கம்... சந்தோஷமாக இருக்கலாம், சோகமாக இருக்கலாம், பரிதாபம், வேட்கை, ரௌத்திரம், வெறுப்பு இப்படி எவ்வகையில் வேண்டுமானாலும் விழலாம். ஆனால், படம் முடிந்த பிறகு மனதில் கொண்டு செல்ல ஏதாவது ஒரு தாக்கம் அமையப்பட வேண்டும். அது தான் ஒரு நல்ல சினிமாவின் அனுபவம்.
அவ்வகையில், ஜல் (ஹிந்தி) என்ற இப்படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் - எச்சரிக்கை. ஒரு படைப்பாளி தான் நினைத்த தாக்கத்தை ரசிகர்களை உணரச் செய்தால், அது படைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
ரான் ஆப் கட்ச் அருகே உள்ள வானம் பார்த்த பூமியில் பயணிக்கும் கதைக்களம். சுற்றியும் மணல், அனல் காற்று. மாரியைக் காணாத அக்கிராமத்திற்கு ப(க்)கா (Bakha) தான் தண்ணீர்க் கடவுள். மணலை வைத்து, காற்று வீசும் தன்மையை வைத்து, நீர் இருக்கும் தடத்தை யூகிப்பவன் நாயகன். கிராமம் எங்கும் தண்ணீர் இல்லை.. அடர்ந்து கிடக்கும் பூமி.. ஒரே ஒப்பாரியாகத் தான் படம் இருக்கும் என எண்ணினால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.
நீர் கிடைக்கும் என்று எண்ணி, நிலம் நிலமாக தோண்டிக் கொண்டிருக்கிறான் நாயகன். ரஷ்யாவிலிருந்து flemmingo பறவை பற்றி ஆராய்ச்சி செய்ய கிம் எனும் பெண் ஒருத்தி அக்கிராமத்திற்கு வருகிறாள். கிம்மின் வருகைக்குப் பின் ஊரிலிருக்கும் அம்புட்டு ஆண் பிள்ளைகளும் அவள் இருக்கும் இடத்தில் கூடி, மாறி மாறி அசடு வழிகின்றனர். குறிப்பாக வேலா என்ற கதாபாத்திரத்தில் வரும் தாத்தா. கிட்டத்தட்ட இவர் செய்கிற வேலையெல்லாம் நாட்டாமை படத்து செந்திலைதான் நினைவுபடுத்தும். நீரின்றி வாடும் அந்த ரணகளத்திலும் இவர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு.
Flemmingo பறவை பற்றி ஆராய்ச்சி செய்யும் கிம், மழை பெய்யாததால் குளத்துத் தண்ணீரில் உப்புத் தன்மை கூடிப்போக அதை அருந்தும் பறவைகள் செரிக்க வழியின்றி இறப்பதாகக் கூறுகிறார். பறவைகளை காக்க நல்ல நீரை வரவழைக்க வேண்டும் என எண்ணுகிறாள். ஊர் மக்களோ, அவர்களுக்கே தண்ணீர் கிடைக்கவில்லை இதில் பறவைக்கு ரொம்ப முக்கியமா என எண்ணுகின்றனர்.
ஆழ்துளை கிணறு அமைக்க கிம் மற்றும் அவள் குழுவினர் முடிவு செய்ய, பக்காவின் துணையால் நீர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு Flemmingo காப்பாற்றப்படுகிறது. ஆனால், மக்களின் நிலை? சரி... போதும்! படம் விரைவில் வெள்ளித்திரை காணவுள்ளதால் இங்கே இத்துடன் கதையை முடித்துக் கொள்வோம்.
ஒரு கலை படைப்பினை கமர்ஷியல் பள்ளிக்கு கொண்டுசெல்லும்போது அலுங்காமல் குலுங்காமல் கொண்டு செல்வது கயிற்றின் மேல் நடக்கும் பயணம் தான். படத்தின் திரைக்கதை அந்தப் பயணத்தை அழகாக நிறைவு செய்கிறது. நடுவே கொஞ்சம் ஆடியது போலத் தோன்றியது; ஆனால் அதை மீண்டும் இழுத்துப் பிடித்து கரை சேர்த்துள்ளார் இயக்குநர்.
தண்ணீர் வர வழைக்க மோட்டார் மிஷினுக்காகும் டீசல் செலவினை நாம் ஏற்க வேண்டும் என நாயகன் கேட்க, வாழ வைக்கிற அத்தியாவசியத் தேவையே அந்தரத்தில் ஆட, ஆடும் ஆபரணங்கள் எதற்கு என்று அவ்வூர் பெண்கள் எல்லாம் கையில், கழுத்தில் இருக்கும் தங்கங்களை கழட்டித் தருகின்றனர்.
தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கர்வம், வீரம், வெட்கம், மானத்தை இழக்கத் துணிவதையும் இப்படம் அற்புதமாக உணர்த்தியுள்ளது.
சோனு நிகாமின் வரிகளில் வரும் 'ஜலு ரே, ஜலு ரே' பாடல் அப்படியே தொண்டையை வறட்சி அடையச் செய்கிறது.
தண்ணீர் இன்றி வாழும் மக்களை பார்க்க நாம் ஆப்பிரிக்கா செல்லத் தேவையில்லை. கொஞ்சம் நம் ஊர் கிராமப்புறங்களை எட்டிப் பார்த்தல் போதும், இன்னும் சில வருடங்களில் தண்ணீர் வற்றிப் போய்விடும், இப்பொழுதே முழித்துக்கொள் என்று அபாயச் சங்கு ஊதுகிறார் இயக்குநர்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட் அம்சங்கள். கண்டிப்பாக படத்தை பார்த்த சில நாட்களுக்கு பக்கெட்டிலோ, குழாயிலோ, பாத்திரத்திற்கோ நீரை இறைக்கும் போது கண்டிப்பாக உங்கள் தலையில் டங் டங் என்று இப்படம் ஒலிக்கும்.
கோமல் சுவாமிநாதனின் கதையில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் தந்த தாக்கத்தையே இப்படம் மிஞ்சி விடுகிறது.
இவ்வருடத்தில் வெளிவந்த படங்களில் தவறவிடக் கூடாத படங்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 'ஜல்'. விரைவில் திரையரங்கில் வெளிவரும். ஆதரவு தருவோம்!