Published : 24 Feb 2017 08:51 AM
Last Updated : 24 Feb 2017 08:51 AM

ஈஷா யோகா மைய ஆதியோகி சிலை திறப்பு விழா: பிரதமர் மோடி இன்று கோவை வருகை

2 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் பங்கேற்பு; பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸார்



ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 24) மாலை கோவை வருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிவன் திருமுகச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் பிரதமர் மோடி இன்று மதியம் புறப்படுகிறார். மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடையும் அவர், சிறிது ஓய்வுக்குப் பிறகு அங்கிருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். பின்னர் குண்டு துளைக்காத காரில் விழா மேடைக்குச் செல்கிறார்.

சிலை திறப்பு, சிவராத்திரி பூஜைகள் தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இரவு 7 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன், ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர். இவர் களுடன் தமிழக அமைச்சர்கள், பாஜக தேசிய, மாநிலத் தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர், முதல்வர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாகவே பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூடுதல் டிஜிபி திரிபாதி, முன்னாள் உளவுப்பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஐஜி பியூஸ் பாண்டே என்பவர் தலைமையிலான மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு (என்.எஸ்.ஜி) மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்.பி.ஜி) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் விழா நடக்கும் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களோடு, ஒரு ஐஜி, 4 ஏஐஜிக்கள், 4 எஸ்பிக்கள், 30 மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகளும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில உளவுப் பிரிவுகள், சிறப்புப் பாதுகாப்புப் படை, நக்சல் தடுப்புப் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை என 5,200 போலீஸார் வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் குவிக்கப் பட்டுள்ளனர்.

முதல்வர்கள், ஆளுநர் உள்ளிட்டோர் கோவை விமானநிலையத்திலிருந்து காரில் செல்வதால் சாலை நெடுகிலும் வேகத்த டைகள் அகற்றப்பட்டு கோவை மாநகரப் போலீஸார் 1,300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிங்கிரி வனப்பகுதியில் மாவோ யிஸ்ட் அச்சுறுத்தல் இருப்பதால் அங்குள்ள வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்புப் பிரிவும், வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர். விழாவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 6 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகரில் போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்

பிரதமரை அழைத்து வருவதற்காக 2 பிரத்யேக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இவை இரவிலும், அனைத்து காலநிலையிலும் பயணிக்கக் கூடியவையாகும். பிரதமருக் கான மருத்துவ சேவைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவோடு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் எட்வின் ஜோ தலைமையில் 4 குழுக்களும், முதல்வர்கள், ஆளுநர் களுக்கு தனித்தனி மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கோவை அரசு மருத்துவமனை சார்பில் பிரத்யேக அவசரகால மருத்துவவசதி வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x