

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வரும் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து அரசுத் தரப்பில் இருந்து எவ்வித சலுகைகளும் அறிவிக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
ஆனால், முன்கூட்டியே பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதால் அது அரசியல் சட்ட விரோதமாகிவிடும். எனவே, மார்ச் 8-ம் தேதிக்குப் பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளன.
சட்டத்தையும், மரபையும் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். எனவே, பிடிவாதம் பிடிக்காமல் 5 மாநில தேர்தல் முடிந்ததும் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.