

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ‘கிராவிடாஸ்-16’ என்ற அறிவுசார் திருவிழாவில் 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலை.யில் ‘கிராவிடாஸ்-16’ என்ற அறிவுசார் திருவிழா நேற்று தொடங்கியது. 8-வது ஆண்டாக நடைபெறும் 3 நாள் திருவிழாவில் 80 தொழில்நுட்ப நிகழ்வுகள், 40 பணிமனை பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் என 120 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில், மாணவர்களின் அறிவுத் திறமையை சோதிக்கும் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.
‘கிராவிடாஸ்-16’ தொடக்க விழா நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘கிராவிடாஸ்-16 திருவிழாவில் விஐடி மாணவர்கள் 16 ஆயிரம் பேர், மற்ற பல்கலைக் கழக மாணவர்கள் 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சியில் பொறியாளர்கள், தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில் வளர்ச் சிக்குத் தேவையான புதிய கண்டு பிடிப்புகள் அவசியமானது.
ஆராய்ச்சி பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தனியார் நிறுவனங்கள் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், விவசாயிகள் நலனுக்காக பயிர் பாதுகாப்புக் கருவிகள், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களுக்கான புதிய தொழில்நுட்பக் கருவிகள், மிதிவண்டி மூலம் செல்போன் சார்ஜ் செய்தல் உள்ளிட்ட 5 புதிய தொழில்நுட்ப கருவிகளை வேந்தர் ஜி.விசுவநாதன் அறிமுகம் செய்துவைத்தார். மேலும், புதிய கருவிகளை உருவாக்கிய மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கினார்.
‘கிராவிடாஸ்-16’ விழாவை கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தொடங்கிவைத் தார். நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், பதிவாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.