Published : 12 Mar 2017 11:13 AM
Last Updated : 12 Mar 2017 11:13 AM

பாண்டிபஜாரில் பிடிக்க முயன்ற போலீஸுக்கு கத்திக்குத்து: பொறியியல் மாணவர் உட்பட 3 கொள்ளையர்கள் கைது - தொடர் வழிப்பறியில் ஈடுபட்டார்களா?

நள்ளிரவில் தனியாக நின்றவர் களை கத்திமுனையில் மிரட்டி பணம், செல்போன்களை பறித்த வழிப்பறி கொள்ளையர்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற பொறியியல் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 கொள்ளையரையும் போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் சிவபிரசாத், அவரது மகன் அருண் ஆகிய இருவரும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சாலையில் நின் றிருந்தனர். அப்போது, 2 பைக்கு களில் வந்த 3 பேர் அவர்கள் இரு வரையும் கத்திமுனையில் மிரட்டி 2 செல்போன்கள், பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.

தி.நகர், பாண்டிபஜார் ம.பொ.சி. சிலை அருகே கொள்ளையர்களை போலீஸார் மடக்கியதில் நிலைகுலைந்து கிடக்கும் பைக்குகள்.

வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடியதும், சிவபிரசாத் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். நுங்கம்பாக்கம் போலீ ஸார் விரைந்து வந்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பாண்டிபஜார் ம.பொ.சி. சிலை அருகே கொள்ளையர்களை மடக்கினர். பைக் நிலைதடுமாறியதில், 3 பேரும் கீழே விழுந்தனர்.

அவர்களை கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவலர் சிவபிரகாசம் பிடிக்க முயன்றார். அப்போது, கொள்ளையர்களில் ஒருவர் சிவபிரகாசத்தை கத்தியால் குத்தினார். இதைப் பார்த்த மற்ற போலீஸார் ஓடிவந்து, 3 கொள்ளையர்களையும் கைது செய்தனர்.

கொள்ளையர்கள் வைத்திருந்த ஆயுதம்.

அவர்கள் திருமங்கலம் விஜய் (21), மோசஸ் (25), பாடி விவேக் (21) என்பது தெரியவந்தது. மகாலிங்கபுரத்தில் வழிப்பறியில் ஈடுபடுவதற்கு முன்பு, இதேபோல திருமங்கலத்திலும் அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தாம்பரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (40) என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருமங்கலம் சென்றிருந்தார். அப்போது, இதே வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரும் 2 பைக்குகளில் சென்று அவரை, கத்திமுனையில் மிரட்டி செல்போன், பணத்தை பறித்துள்ளனர். அதன் பிறகு, மகாலிங்கபுரத்தில் கைவரிசை காட்டியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

பிடிபட்ட 3 பேரும் போதை யில் இருந்தனர். கஞ்சா பயன்படுத்தியிருந்தனர். அவர் களில் விஜய் என்பவர், பொறியியல் கல்லூரி மாணவர் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர். நள்ளிரவு நேரத்தில் தனியாக நிற்பவர்களை மிரட்டி பணம், பொருட்களை பறிப்பதை வழக்கமாகக் கொண்டவர் களா என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x