Published : 02 Jan 2014 06:55 PM
Last Updated : 02 Jan 2014 06:55 PM

திருப்பூர்: தொட்டிக்கரி ஆலை பிரச்சினை; 22 கிராமங்களில் கறுப்புக்கொடி போராட்டம்

காங்கயம் வீரணம்பாளையத்தில் தொட்டிக்கரி ஆலைகளை மூடக்கோரி, புதன்கிழமை 22 கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் நூற்றுக்கணக்கில் தேங்காய் எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் தேங்காய் தொட்டிகள் (சிரட்டை) கழிவுப் பொருளாகும். இங்கு சேகரமாகும், டன் கணக்கில் தேங்காய் தொட்டிகளை, இங்குள்ள கிராமப் பகுதிகளில் இயங்கும் கரி சுடும் ஆலைகளில் வாங்கிச் சென்று, தேங்காய் தொட்டிகளை எரித்து கரி உற்பத்தி செய்கின்றனர்.

இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, தோல் நோய்கள் பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கரித்தொட்டி ஆலைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வீரணம்பாளையம் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 22 கிராமங்களில், புதன்கிழமை வீடுகள் தோறும் கறுப்புக் கொடி கட்டி வைத்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வீரணம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தேங்காய் தொட்டிக்கரி நச்சு தொழிற்சாலைகளால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பது போன்ற தொழில்கள் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளது. உலகத்திலேயே நீர் மட்டத்திற்கு கீழே கிணறு தோண்டி, தேங்காய் தொட்டிக்கரி சுடும் முறை, தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாத இந்த முறையை, திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம் மட்டுமே அங்கீகரிக்கிறது.

இது தொடர்பாக, பல போராட்டங்கள் நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், இந்தாண்டும் கரிபடிந்த கறுப்பு ஆண்டாகவே தொடர்கிறது. எனவே, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும் அனுமதி காலாவதியாகி தொடர்ந்து இயங்கும் தேங்காய் தொட்டிக்கரி நச்சு ஆலைகளை, நிரந்தரமாக மூட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை கரிபடிந்த கறுப்பு ஆண்டாக குறிக்கும் வகையில், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட 22 கிராமங்களில் உள்ள 1,500 வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x