Published : 17 Jan 2014 11:36 AM
Last Updated : 17 Jan 2014 11:36 AM

இட ஒதுக்கீடு விதி மீறல் குறித்து தணிக்கை தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு விதி மீறல் குறித்து தணிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் தொட்டிலாக போற்றப்படும் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நடைபெறும் விதி மீறல்களை பார்க்கும்போது இட ஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. பல துறைகளில் இட ஒதுக்கீட்டு விதிகள் சிறிதும் மதிக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனியாக தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், இந்த நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. முன்னேறிய பிரிவினருக்கும், பின் தங்கிய வகுப்பினருக்கும் ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவதால் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பலரின் ஆசிரியர் பணி வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

சமூக நீதிக்கு துரோகம்:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச்செயலக கட்டிடத்தை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டுள்ள பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்வதிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. இது சமூக நீதிக் கொள்கைக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

இவற்றையெல்லாம் தாண்டி இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ள தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 200 புள்ளி சுழற்சி முறை (200 Point Roster) இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு விதி மீறல் அதிகரித்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு துறையையும் தனித்தனி அலகாக கருதி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், யாருக்கும் கட்டுப்படாத அமைப்புகளாக தங்களை கருதிக் கொள்ளும் பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறை இட ஒதுக்கீட்டு விதிகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு தங்களின் விருப்பம்போல பணியாளர்களை நியமித்துக் கொள்கின்றன.

பல பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறை இட ஒதுக்கீட்டுக்காக பராமரிக்க வேண்டிய ரோஸ்டர் புத்தகத்தை பராமரிப்பதில்லை என்பதிலிருந்தே இட ஒதுக்கீட்டுக்கு எந்த அளவுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இட ஒதுக்கீட்டு விதிகளை அப்பட்டமாக மீறுவதில் தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் விதி விலக்கல்ல. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருப்பதே இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதற்கு ஆதாரமாகும்.

இடஒதுக்கீட்டு விதி மீறல் காரணமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோரின் பேராசிரியர் பணி வாய்ப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதி உடனடியாக களையப்படாவிட்டால், அது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் துடைக்கமுடியாத களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அரசு உணரவேண்டும்.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டனவா? என்பது குறித்து தமிழக அரசு தணிக்கை செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அவற்றை அந்தந்த இட ஒதுக்கீட்டு பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x