Published : 13 Nov 2013 09:11 AM
Last Updated : 13 Nov 2013 09:11 AM

மின் நிலையங்களில் உற்பத்தி சரிவு: தமிழகத்தில் மின் வெட்டு 6 மணி நேரமாக அதிகரிப்பு

நெய்வேலி அனல்மின் நிலையம், கல்பாக்கம், கைகா அணு மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளில் மின் உற்பத்தி பெருமளவு குறைந்ததால், தமிழகத்தில் மின் வெட்டு 6 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. பெரும்பாலான நாட்களில் 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் காற்றாலைகளில் 3,000 மெகாவாட்டுக்கும் மேலாக மின்சாரம் உற்பத்தியானதால் மின் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

இதுதவிர புதிய மின் நிலையங்களான மேட்டூர் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை, வடசென்னை 600 மெகாவாட் புதிய மின் நிலையம் ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி நடந்து வருவதால், தமிழகத்துக்குத் தேவையான மின்சாரம் கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபருடன் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் முடிந்ததால் மீண்டும் மின் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. தமிழக மின் நிலையங்களிலும், மத்திய பொதுத்துறை மின் நிலையங்களிலும் அடிக்கடி தொழில்நுட்ப மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மணிக்கணக்கில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. முதலில் தினமும் 2 மணி நேரமாக இருந்த மின் வெட்டு நேரம், படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு தினங்களாக 6 மணி நேரம் வரை அமல்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

மின்வெட்டு இனி இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மின் வெட்டு அமல்படுத்தப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய மாநில மின் வினியோக மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்து விட்டதால், மின்வெட்டை கூடுதல் நேரம் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றனர்.

திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் 3,500 மெகாவாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்பட்டது. இது மொத்த தேவையான 13,000 மெகாவாட்டில் நான்கில் ஒரு பங்காகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 229 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. 22 மில்லியன் யூனிட் மின்சாரம் மின்வெட்டால் சமாளிக்கப்பட்டது என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x