Last Updated : 22 May, 2017 09:24 AM

 

Published : 22 May 2017 09:24 AM
Last Updated : 22 May 2017 09:24 AM

இந்திய குடிமைப் பணிகளுக்கு நேர்மை மிக அவசியம்: சேவை மனப்பான்மையோடு ஐஏஎஸ் பணிக்கு வாருங்கள்- ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்வில் புதுச்சேரி தேர்தல் அதிகாரி கந்தவேலு அறிவுரை

இந்திய குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு வர நினைப்பவர்கள் சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வர வேண்டும் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு அறிவுரை வழங்கியுள்ளார்.

‘தி இந்து' நாளிதழ் ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி' ஆகியன இணைந்து ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்' நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் புதுச்சேரி அரசின் நிதித்துறை செயலரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான கந்தவேலு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தத் தேர்வை எழுதுபவர்களுக்கு கடின முயற்சியைக் (ஹார்டு ஒர்க்) காட்டிலும் திட்டமிட்ட முயற்சி (ஸ்மார்டு ஒர்க்) வெற்றி தரும். மனச்சோர்வு அறவே கூடாது.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத நினைப்பவர்களுக்கு நாளிதழ் படித்து நடப்பு விஷயங்களை அறிவதில் ஆர்வம் இருக்க வேண்டும். இதற்கு நல்ல நாளிதழ்களை தேர்வு செய்வது அவசியம். ‘தி இந்து' நாளிதழ் அதற்கு நல்ல ஒரு தேர்வு. நாளிதழ் வாசிப்பைத் தாண்டி பிற பொதுஅறிவு சார்ந்த தகவல்களையும் அறிவது அவசியம்.

குடிமைப் பணிக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எளிதாக தெரியும். ஆனால் அதற்கான பதில் சிந்தனையை தூண்டும்படியாக இருக்கும். இந்தத் தேர்வுக்கு தயாராகும்போது நேர மேலாண்மையை கடைபிடிப்பது முக்கியம்.

குடிமைப் பணியை தேர்வு செய்பவர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம். சேவை நோக்கோடு ஐஏஎஸ் பணிக்கு வாருங்கள். பணியின் கடைசி காலம் வரை அதை கடைபிடிக்கும் உறுதியோடு இருங்கள். அப்போதுதான் குடிமைப் பணியை நீங்கள் உங்களது விருப்பப் பணியாக தேர்வு செய்ததற்கான உண்மையான அர்த்தம் நிறைவேறும்.

குடிமைப்பணியை நடத்தும் யுபிஎஸ்சி நிறுவனம் ஒரு வெளிப்படையான நிறுவனம். அது மிக நேர்மையாக தேர்வினை அணுகும். அதன் மீது அச்சமோ, சந்தேகமோ தேவையில்லை என்று கூறினார்.

புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அரசு செயலாளர் மணிகண்டன்:

ரொம்பவும் சீரியஸா அணுகக் கூடிய தேர்வல்ல இது. மாறாக ரொம்பவும் சந்தோஷமா அணுக வேண்டிய தேர்வு இது. ஐஏஎஸ் தேர்வுக்கு பகுத்தாய்ந்து படிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தேர்வு முறை இப்போது இல்லை. நிறைய மாறியிருக்கிறது. இப்போது இதே தேர்வை நான் எழுதினால் தேர்ச்சி பெறுவேனா என்று தெரியவில்லை.

தமிழ் மீடியத்தில் படித்த நான், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சுயமாய் தயாராகி வெற்றி பெற்றேன். நான் 5-வது முறையில்தான் வெற்றி பெற்றேன். பயிற்சி மையங்களுக்கு சென்றால் தேர்வை இலகுவாய் அணுக வழியுண்டு.

பணம் சம்பாதிப்பதற்காக தயவுசெய்து ஐஏஎஸ் பணிக்கு வராதீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அதிக ஊதியம் வெளியிலே வேறு பணிகளிலும் கிடைக்கிறது. எளிய மக்களின் நலனை நினைவில் வைத்து இத்தேர்வுக்கு தயாராக வேண்டும். உங்களுக்கு தேவையானவை எல்லாமே தற்போது இணையத்தில் கிடைக்கிறது. நேர்முகத் தேர்வில் உங்களின் தனிப்பட்ட திறமை, உடல் மொழிகள் (பாடி லேங்குவேஜ்) முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். அதிகாரிகள் வெளிப் படையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 30 வயதுக்குள் இப்பணிக்கு வந்தால் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

மக்களோடு இணைந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் உங்கள் பணியைச் செய்தால் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

திண்டிவனம் சார் ஆட்சியர் பிரபு சங்கர்:

ஐஏஎஸ் ஆக தனித்திறமை வேண்டும் என்ற அவசியமில்லை. திட்டமிட்ட உழைப்பின் மூலம் ஐஏஎஸ் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். தமிழ் மொழியிலும் ஐஏஎஸ் தேர்வை எழுதலாம். ஆனாலும் ஆங்கில அறிவையும் வளர்த் துக் கொள்வது அவசியம். நான், இரு விஷயங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக் கிறேன்.

ஒன்று எனது பள்ளி ஆசிரியர்களுக்கு. மற்றொன்று 'தி இந்து' இதழுக்கு. குடிமைப் பணித் தேர்வுகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என 26 சேவைப் பிரிவுகளை கொண்டது.

இந்த 26 பிரிவுகளில் எதையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். எல்லாத் துறைகளுக்கும் சிறந்த பொறுப்புகள் உண்டு. ஆனால், ஐஏஎஸ் பன்முகத் தன்மை கொண்டது. ஐஏஎஸ் தேர்வானால் பல துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் காட்டப்படுகிறது.

இத்தேர்வை எதிர்கொள்ளும் முன், ஐஏஎஸ் என்றால் என்ன? ஏன் ஐஏஎஸ் படிக்க வேண்டும்? யார் யாரெல்லாம் படிக்கலாம்?, எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? ஆகிய கேள்விகளுக்கு தெளிவான பதில்களை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

குடிமைப்பணிகளுக்கு வர விரும்பு பவர்கள் உயரிய நோக்கங்களை மனதில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பட்டப் படிப்பு முடிவும் தருவாயிலேயே ஐஏஎஸ் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். விருப்பப் பாடம் தேர்வு செய்வதில் போதிய கவனம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தங்களது ஐயங்களை எழுப்பினர். நிகழ்ச்சியை முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

புதுச்சேரி - வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரி வளாகத்தில் 'உனக்குள் ஓர் ஐஏஎஸ்' நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரங்கத்தை நிறைத்து ஆர்வத்தோடு பங்கேற்ற இளையோர் கூட்டம் உள்ளிருக்க, மாணவர்களின் பெற்றோர் வெளியே இருந்தபடி அதே ஆர்வத்தோடு நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

முதலும் இறுதியுமான லட்சியம் சமத்துவம்: ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ்

வரலாற்று நோக்குடன் ‘தி இந்து' தொடங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்நிகழ்ச்சியின் மைய நோக்கம், அதிகாரத்தில் சமமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே. இந்தியாவைப் பொறுத்த அளவில் இந்த நாட்டின் பன்மைபோக்குக்கான அடிநாதம் மாநிலங்களின் சுயாட்சியில் இருக்கிறது. எவ்வளவோ சிறப்புகளைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டம் இந்த விஷயத்தில் குறையோடுத்தான் இருக்கிறது.

தேசப்பிதா காந்தி சுட்டிக்காட்டியபடி, மையப்படுத்தப்பட்ட இந்த அதிகாரமானது பரவலாக்கலில் நம்பிக்கை கொள்ளவில்லை. அப்படியென்றால் நாம் இந்த அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களாக மட்டுமல்ல. இதிலுள்ள குறைகளையும் திருத்துபவர்களாக உருவெடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மேலும் பன்மைத்துவமாக்கும் வகையில் மேலும் அதிகார பரவலாக்கும் வகையில் திருத்தும் இடத்தில் நாம் அமர வேண்டும்.நம்முடைய கனவுகளும், லட்சியங்களும் அந்த அளவுக்கு விரிய வேண்டும்.

அதற்கு முதலில் வரலாற்றில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற புரிதல் வேண்டும். இட ஒதுக்கீடு வரலாற்றையும், மொழிப்போர் வரலாற்றையும் கூட தெரிந்து கொள்ளாத ஒரு தமிழ் மாணவர் அதிகாரத்தை கனவு காண முடியாது. அப்படி கனவு காணும் அதிகாரத்தினால் எளிய மக்களின் வாழ்வில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது. நம்முடைய முதலும், இறுதியுமான லட்சியம் சமத்துவம் என்றாக வேண்டும். அதற்கு அதிகாரப்பகிர்வும், சமமான விகிதாச்சார பிரதிநிதித்துவமே வழி என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

ஐஏஎஸ் வெற்றிக்கு ‘தி இந்து' வாசிப்பு மிக முக்கியம்: கிங் மேக்கர்ஸ் இயக்குநர் சத்ய பூமிநாதன்

ஐஏஎஸ்க்கு தேர்வாகும் மாணவர்கள் ‘தி இந்து' நாளிதழை ஆழ்ந்து வாசிப்பது அவசியம். இதில் இருந்து கூட தேர்வுக்கு வினாக்கள் எடுக்கப்படுகின்றன. நடப்பு நிகழ்வுகளை ‘தி இந்து' வாசிப்பதன் மூலமே முழுமையாய் அறியலாம்.

‘தி இந்து' நடுப்பக்க கட்டுரையில் இருந்து ஐஏஎஸ் பயிற்சிக்கான வாசிப்பை ஒரு மாணவன் தொடங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x