வனவிலங்கு பாதுகாப்புக்காக அணை கட்டியதாக ஆந்திர அமைச்சர் கூறுவதா?- தமிழக விவசாயிகள் சங்கம் வேதனை

வனவிலங்கு பாதுகாப்புக்காக அணை கட்டியதாக ஆந்திர அமைச்சர் கூறுவதா?- தமிழக விவசாயிகள் சங்கம் வேதனை
Updated on
1 min read

வனவிலங்குகள் பாதுகாப்பிற்காகத்தான் அணையைக் கட்டியுள்ளோம் என்று நியாயப்படுத்தி ஆந்திர வனத்துறை, சுற்றுசூழல் அமைச்சர் கூறியுள்ளது வேதனையாக உள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே புல்லூர் என்ற இடத்தில் ஆந்திர அரசு சட்டவிரோதமாக அணையைக் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தேக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் புல்லூருக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் அந்த அணையில் நிரம்பியுள்ள தண்ணீரை தமது நிலத்திற்குப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டதே என்று மனம் உடைந்து அந்த அணை தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சீனிவாசனின் தற்கொலை சம்பவத்தை மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார் என உண்மைக்குமாறான செய்தியைப்பரப்பி வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு மேல் அணையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது அதைத் தடுப்பதற்கு முயற்சிக்காத அதிகாரிகள், விவசாயி தற்கொலை செய்து கொண்டதை தவறிவிழுந்து இறந்து விட்டார் என்று உண்மைக்குமாறான செய்தியை வெளியிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மரணமடைந்தவர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளது போதுமானதல்ல, ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும்.

வனவிலங்குகள் பாதுகாப்பிற்காகத்தான் அணையைக் கட்டியுள்ளோம் என்று நியாயப்படுத்தி நேற்றைய தினம் ஆந்திர வனத்துறை, சுற்றுசூழல் அமைச்சர் கூறியுள்ளது வேதனையாக உள்ளது.

பாலாற்றில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டரீதியான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. ஆகவே அந்த அணையை அகற்றிட தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கையை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்'' என்று துரைமாணிக்கம் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in