Published : 20 Jul 2016 05:40 PM
Last Updated : 20 Jul 2016 05:40 PM

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, 5 ஊழியர்களுக்கு மருத்துவ அட்டையை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ அரசு ஊழியர்களுக்காக கடந்த 2012 ஜூலை1-ம் தேதி முதல், இந்தாண்டு ஜூன் 30-ம் தேதி வரை 4 ஆண்டு காலத்துக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது. ஜூன் 30-ம் தேதியுடன் இத்திட்டம் முடிந்ததை தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி முதல் 4 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை, கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையை பின்பற்றி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இக்காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள குறைந்த பட்சம் 40 சதவீதம் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன்பெறலாம். விபத்து காரணமாக இத்திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் எடுத்திருந்தாலும், இதில் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் அரசுத்துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டு பலன்களை பெற முடியும்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு பணியாளர்கள சந்தா தொகையாக மாதம் ரூ.180 செலுத்த வேண்டும். தமிழக அரசு தன் பங்காக ரூ.17 கோடியே 90 லட்சத்தை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கும். இத்திட்டம் மூலம் 10 லட்சத்து 22 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுக்கான இப்புதிய காப்பீட்டுத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x