

கேரளாவைப் போல தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப் பின் செயலர் செ.நல்லசாமி.
திருச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
‘’எத்தனாலை வாகன எரிபொரு ளாகப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணம் உயர்த்தியதைப் பற்றி நடத்தப்படும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வெறும் கண் துடைப்பாக இருக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
ஆவின் பால் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும். விவசாயிகளின் உற் பத்திப் பொருளுக்கு ஆய்வுக்குழு பரிந்துரைத்த விலையை நிர்ணயிக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் புலியூர் நாகராஜன், பாரதிய கிசான் சங்க மாநில துணைத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.