

பாலாற்றில் தடுப்பணை விவகாரத்தில் மத்திய அரசு தனது பாராமுகத்தை கைவிட்டு உடனடியாக தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர மாநில அரசு, தனது மாநிலத்தில் 33 கி.மீ.தூரம் பயணிக்கும் பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டி முடித்ததுடன், அவைகளை மேலும் உயர்த்தி வருகின்றது. புல்லூரில் 12 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட அணையின் காரணமாக சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைத்திடத் கூடாது என்று அண்டை மாநிலமான ஆந்திர அரசு முடிவு எடுத்து செயல்பட்டு வருகின்றது.
அணையின் அந்தப் பக்கம் (ஆந்திரா) தண்ணீர் நிரம்பி வழிகின்றது. ஆனால் இந்தப் பக்கம் (தமிழ்நாடு) சொட்டுத் தண்ணீர் கூட இன்றி பாலைவனமாக காட்சி அளிக்கின்றது. இயற்கை நமக்கு மழையை தருகின்றது, எல்லோருக்கும் பெய்யும் மழையை தங்களுக்கு மட்டுமே என ஆந்திர அரசு சொந்தம் கொண்டாடி மகிழ்கின்றது. இயற்கை யாருக்கும் துரோகம் செய்யவில்லை, மனிதர்கள் தான் ஒருவருக்கொருவர் துரோகம் செய்கின்றனர்.
1892 ம் ஆண்டு இரு மாநில அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் அப்பட்டமாக மீறப்படுகின்றது. தேசிய நதிநீர் ஆணையம் பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டக் கூடாது என்று ஆந்தர அரசுக்கு கூறிய அறிவுரைகளுக்கு மதிப்பில்லை.
தமிழ்நாடு முதல்வர் ஆந்திர முதல்வருக்கு எழுதிய வேண்டுகோள் கடிதம் எக்கதியானது எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அது எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், தீர்ப்பு வரும் என்று எவருக்கும் தெரியாது.
பல மாமாங்கம் ஆகலாம், அதற்கு மேலும் ஆகலாம். உச்ச நீதிமன்றத்திற்கு எவரும் உத்திரவு பிறப்பிக்க இயலாது. உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கினாலும், அதனை அரசுகள் அமுல்படுத்தாது (காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை குழு அமைத்தல், ஒழுங்காற்று குழு அமைத்தல் உதாரணமாகும்) .
இந்நிலையில் தன் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் (50) தண்ணீர் நிரம்பிய பாலாற்றில் குதித்து மரணமடைந்துள்ளார். உடலைத் தேடி வருகின்றார்கள் என்ற துயரமிக்க செய்தி வந்துள்ளது. விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார், அவரது கொலைக்கு யார் காரணம் என்பதனை நாட்டு மக்களும் அதிகார பீடத்தில் அமர் திருக்கும் ஆட்சியாளர்களும் உணரட்டும்.
இன்னும் எத்தனை, எத்தனை சீனிவாசன்களின் உயிர்பறி போகுமோ என்ற கவலை நம்மை வதைக்கிறது. விலை மதிப்பில்லா சீனிவாசனின் உயிருக்கு மதிப்பளித்து அவரது உடலை தேடிக் கண்டறிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதுடன், தனது குடும்பத்தில் மூத்த மகனை இழந்த சீனிவாசன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனக் கோருகின்றோம்.
நொடிப்பொழுதும் காலம் தாழ்த்தாது, புல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள 12 அடி உயர தடுப்பணையை அகற்றிட போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு தனது பாராமுகத்தை கைவிட்டு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும். மாநில முதல்வர் ஆந்தர முதல்வருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, தனக்குரிய செல்வாக்கு முழுமையும் பயன்படுத்திடக் கூடிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் .
பிரச்சினையின் தீவிர தன்மையை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை எனில், தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்படும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.