

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணைக்காக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆசிரியர்கள் சிலர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக பள்ளிக் கல்வித் துறை செய லாளர் சபீதாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா ஆஜரானார். நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தகுதியுடைய ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு விட்ட தாக அரசு வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
எனினும், நீதிமன்ற உத்த ரவை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாதது குறித்து நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். “ஐ.ஏ.எஸ். அதிகாரி களையெல்லாம் நீதிமன்றத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அதிகா ரிகள் உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல் இருப்பதால்தான் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கான ஏராளமான வழக்குகள் இந்த நீதிமன்றத்துக்கு வருகின்றன” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.