

ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட, ஆலமரம்போல வேரூன்றியுள்ள அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் தெரிவித்தார்.
எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள அவரது சிலைக்கு ம.நடராஜன் நேற்று மாலை அணிவித்தார். இதில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மலேசியா நாட்டின் கல்வி அமைச்சர் ஒய்.பி.கமலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருவது மகிழ்ச்சி தருகிறது. ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அத்துமீறல்களைக் கண்டிக்கவும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முன்னின்ற எம்ஜிஆருடன் பக்க பலமாக இருந்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இங்கு இருக்கிறார். இதைப் பார்க்கும் போது எம்ஜிஆரின் இதயம் இங்கு இருப்பது போலேவே தோன்றுகிறது.
ஜெயலலிதா மறைந்துவிட்ட இந்த நேரத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது மிகவும் வருத்தம் தருகிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த 44 ஆண்டு காலமாக அதிமுக வீரநடை போட்டு வருகிறது. இந்த இயக்கம் மேலும், மேலும் வலுப்பெறும். ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட, ஆலமரம்போல, வேரூன்றியுள்ள இந்த இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றார்.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் தஞ்சை தமிழ்ச் சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா செட்டிக்குளம் சாரதாம்பாள் பி.எல்.காயத்ரி குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது.
கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் ‘இவர் தான் எம்ஜிஆர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாஞ்சில் அன்பழகன், மதிவாணன், இளைய கம்பன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
தொடர்ந்து, புலவர் புலமைப்பித்தன் தலைமையில் ‘என் பார்வையில் புரட்சித் தலைவர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பேராசிரியர் ராஜகோபாலன், முனைவர் புனிதா, கவிஞர் நீலம்மதுமாயன் ஆகியோர் பேசினர்.
மாலையில் புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் இன்னிசையும், எல்லோரும் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வாழ்த்தரங்கமும் நடைபெற்றது. இதில், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை வகித்தார். ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். மேரிலாண்ட் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜன் நடராஜன், சிங்கப்பூர் துணைப் பிரதமரின் ஆலோசகர் ஜோஸ்வாகுமா, மலேசிய கல்வி அமைச்சர் ஒய்.பி.கமலநாதன், நைஜிரியா லாகோஸ் மாநிலங்களவை சபாநாயகர் அஜேபிஓயாசா, அமெரிக்க நாட்டின் தமிழ் இளையோர் உலகக் கூட்ட மைப்பின் தலைவர் விஜய் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்கர் கணேஷ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
‘தமிழகத்துக்கு எதிராக சதிவலை’
தஞ்சை தமிழ்ச் சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழாவின் நிறைவு விழாவில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேசியது:
ஒரு வெளிநாட்டு அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள 12 கோடி தமிழர்களும் இத்தடையை உடைத்தெறிய வேண்டும். தற்போது, கிராமங்கள் தோறும் அந்த தடையை இளைஞர்கள் உடைத்து எறிந்து ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசுக்கும், தமிழர்களின் உரிமைக்கும் எதிராக சதிவலை பின்னப்படுகிறது. அதைச் செய்பவர்கள் முகத்தை வெளியில் காட்டாமல் பிரச்சாரம் செய்கின்றனர். அதை, முறியடிக்க அரசியல் எல்லைகளைக் கடந்து தமிழர்கள் களம் இறங்க வேண்டும்” என்றார்.