Published : 08 Jan 2014 12:00 AM
Last Updated : 08 Jan 2014 12:00 AM

மீண்டும் உடைகிறது கொ.மு.க.?- பெஸ்ட் ராமசாமி அணியில் குழப்பம்

பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொ.மு.க. கட்சியில் தேர்தல் குறித்து பேச அமைக்கப்பட்ட 51 பேர் கொண்ட குழுவின் மூலம் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ளன. இதனால் இக்கட்சித் தலைவர் ஏற்கெனவே அறிவித்த பா.ஜ.க. கூட்டணி மற்றும் 6 வேட்பாளர்கள் அறிவிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பெஸ்ட் தலைமையிலான கொ.மு.க. மீண்டும் உடையும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர் அக்கட்சியின் அனுதாபிகள்.

கொங்கு மண்டலத்தில் கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பெரிய எழுச்சியுடன் உருவானது கவுண்டர் கட்சியான கொ.மு.க. கொங்கு மண்டலத்தில் உள்ள 11 எம்.பி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி கணிசமான வாக்குகளையும் பெற்றது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் தோற்றது. இதில், கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

பெஸ்ட் ராமசாமி கொ.மு.க. பேனருடனே இயங்கி, தன் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார். புதிய நிர்வாகிகளில் பொதுச் செயலாளராக ஜி.கே. நாகராஜ் அறிவிக்கப்பட்டார். அதேசமயம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) என்ற இயக்கத்தை ஈஸ்வரன் தொடங்கினார். அதன் மாநாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அளவில் பெருந்துறையில் கூட்டினார்.

அதே நாளில் `பா.ஜ.க.வுடன் கொ.மு.க. கூட்டணி அமைக்கிறது' என்று திடீர் அறிவிப்பு செய்து 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் களையும் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார் பெஸ்ட் ராமசாமி.

இந்தச் சூழ்நிலையில், கடந்த திங்கள்கிழமை கோவையில் கூடிய கொ.மு.க., மாவட்ட, மாநில நிர்வாகிகள் 51 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு, தேர்தல் பணிகளைக் கவனிப்பதுடன், கூட்டணி அமைப்பது மற்றும் வேட்பாளர்கள் தேர்வு போன்ற வற்றையும் இறுதி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவரான பெஸ்ட் ராமசாமி பங்கேற்கவில்லை. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.நாகராஜ் தலைமையில்தான் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் நாகராஜ் உள் ளிட்ட நிர்வாகிகள் முன்வைத்த யோசனையை பெஸ்ட் ராமசாமி நிராகரித்ததோடு, தன்னிச்சையாகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு என்று செயல்பட்டார். அதனாலேயே தற்போது பெஸ்ட் தவிர்த்து ஏனையோர் கூடி 51 பேர் கொண்ட புதிய தேர்தல் கமிட்டியை உருவாக்கியுள்ளனராம். பெஸ்ட் அறிவித்த வேட்பாளர்கள் 6 பேரில் 2 பேர் கட்சியில் இல்லாதவர்கள் என்றும், மற்ற வேட்பாளர்களும் கட்சிப் பணியில் அவ்வளவு ஈடுபாடு காட்டாதவர்கள் என்றும் அவர்களை வேட்பாளர்கள் என அறிவித்தது செல்லாது என்றும் இந்த குழு அறிவிக்கப் போவதாகத் தெரிகிறது. இதை பெஸ்ட் ஏற்றுக்கொள்ளாவிட்டால் திரும்பவும் கொ.மு.க.வில் பிளவு உறுதி என்றும் இந்த கட்சிக்குள் தகவல்கள் கசிகின்றன.

இதுகுறித்து கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமியை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x