

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதி காரிகள் பயிற்சிக் கல்லூரிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட கொடிக்கான அங்கீகாரம் வழங் கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள ஜிம்கானா ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரித் தலைவர் எஸ்.கே.கடியோக் ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கான புதிய கொடியை இந்து, முஸ்லிம், சீக்கிய மற்றும் கிறிஸ்தவ மத குருக்கள் ஆசீர் வதித்தனர். கல்லூரி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த குடியரசுத் தலைவர், கல்லூரிக்கான கொடி அங்கீகாரம் வழங்கி பேசியதாவது:
1948-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் சிறந்த பயிற்சி நிறுவன மாக, முப்படை அதிகாரிகள் பயிற்சி மையமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் இருந்து 1,700 அதிகாரிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் அந்தந்த நாடுகளில் பாதுகாப்புத் துறையின் உயர் பதவி வகித்துள்ளனர். தற்போது 31 நாடுகளில் இருந்து 40 அதிகாரிகள் படித்து வருகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் நாடுகளின் தூதர்களாக உள்ளனர். இது நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் ஐஎஸ்ஓ 9001, 14001 சான்று பெற்றுள்ளது. மேலும், தங்க மயில் தேசிய பயிற்சி மைய விருதை 2016-ம் ஆண்டு இந்த நிறுவனம் பெற்றுள்ளது. பயிற்சி அளிப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண் கல்வி, பெண் குழந்தை பாது காப்பு, தூய்மை பாரதம் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்றார்.