புறம்போக்கு நிலங்களில் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது? - பேரவையில் அதிமுக - திமுக வாக்குவாதம்

புறம்போக்கு நிலங்களில் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது? - பேரவையில் அதிமுக - திமுக வாக்குவாதம்
Updated on
2 min read

கடந்த திமுக ஆட்சியில் புறம்போக்கு நிலங்களில் யாருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன என்பது தொடர்பாக அமைச்சர்களுடன் திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் நேற்று சமூக நலம், சத்துணவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம் வருமாறு:

கீதாஜீவன் (திமுக):

தூத்துக் குடியில் வீட்டுமனை கேட்டு பல ஆண்டுகளாக காத்திருப் பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:

வருவாய்த் துறை சட்டங்களின்படி புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க குறைந்தது 10 ஆண்டுகள் அந்த இடத்தில் குடியிருந்திருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் 2007-08ம் ஆண்டில் மட்டும் இந்த விதிமுறைகளைத் தளர்த்தி 10 முறை சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறைந் தது 10 ஆண்டுகள் குடியிருந் திருக்க வேண்டும் என்பதை 5 ஆண்டுகள் என்றும், பிறகு 3 ஆண்டுகள் என்றும் குறைக்கப் பட்டன.

யாருக்காக இந்தச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இதன் மூலம் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இதனால்தான் கடந்த ஆண்டு பெய்த மழையின்போது பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்:

நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். விதிமுறைகளின்படியே மக் களுக்குப் பட்டாக்கள் வழங்கப் பட்டன. மக்களுக்காகவே சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

விதிமுறைகளின்படியே பட்டா வழங்கப்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிமுறைகளின்படி செயல் படவில்லை என்பதற்கு இதுவே உதாரணம்.

அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி:

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 1996, 1997 திமுக ஆட்சியில் 20.13 ஹெக்டேர் நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டது. இது ஏரியாகும். இங்கு 1,781 வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மழை வந்தபோது வெள்ளச்சேதம் ஏற்பட்டது.

ஐ.பெரியசாமி (திமுக):

திமுக ஆட்சியில் பட்டா வழங்கு வதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையி லேயே சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அமைச் சர் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்க்கிறார். வெள்ளச் சேதம் ஏற்பட்டதற்கு புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்கப்பட்டது காரணமல்ல. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்பட்டதே காரணம்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

கடந்த திமுக ஆட்சியில் கோவை அம்மன்குளத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகள் புதைந்தன. இந்த வரலாறை நாடே அறியும்.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:

சென்னையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்தது. இதுவே வெள்ளச் சேதத்துக்கு காரணம்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்:

ஆக்கிரமிப்பாளர்களுக்காகவே கடந்த திமுக ஆட்சியில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

மு.க.ஸ்டாலின்:

திமுக ஆட்சியில் மக்களுக்காகவே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வது தவறு.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 1996, 1997 திமுக ஆட்சியில் 20.13 ஹெக்டேர் நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டது. இது ஏரியாகும். இங்கு 1,781 வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in