

ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு ஒரு துக்க வீட்டின் சூழலை மனக்கண்ணில் கொண்டு வாருங்களேன். எப்படி இருக்கிறது? கண்ணீரும் கம்பலையும் அழுகையும் ஆற்றாமையும் என சோக உணர்வுகள் மட்டுமே உறவாடும் கறுப்புக் களம் அது. அங்கு சென்று ஒரு கோரிக்கையையோ அல்லது அந்த வீட்டின் உணர்வுடன் ஒன்றிப்போன மிகப்பெரிய ஒரு விஷயத்தையோ ‘கொடுங்கள்’ என்று கேட்க முடியுமா? ஆனால், ’உடல் உறுப்பு தான ஆலோசகர்கள்’ கேட்கிறார்கள்; சமயங்களில் பெறவும் செய்கிறார்கள். எல்லாம் நம் சமூகத்துக்காக!
ஹிதேந்திரன் என்னும் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்ட பிறகே தமிழகத்தில் உடல்தானம் தொடர்பான விழிப்புணர்வு ஓரளவேனும் ஏற்படத் தொடங்கியது. அந்த உடல் உறுப்பு தானத்துக்கான முன்னெடுப்பு பணிகளை செய்பவர்கள்தான் உடல் உறுப்பு தான ஆலோசகர்கள்.
கடும் உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழலையும் எளிதில் எதிர்கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை உடல் உறுப்புகளை தானம் செய்ய வைப்பதே இவர்களின் பணி. பொதுவாக மூளைச்சாவு என்று மருத்துவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பு இவர்கள் அந்த குடும்பத்தினரை அணுகுவார்கள். சம்மதம் கிடைத்துவிட்டால் அதன்பின்பு சட்டம் உள்ளிட்ட அத்தனை நடைமுறை விஷயங்களையும் இவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் தான ஆலோசகராக இருக்கிறார் ஆனந்த். ‘’யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம். ஆனால், மண்ணுக்கு செல்வதை மனிதனுக்கு தரலாமே என்போம். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்கூட துக்க நிகழ்வில் கடைசி வரை கலந்துகொண்டு ஆறுதல் கூறுவோம்.” என்கிறார்.
உடல்தான ஆலோசகரும் அப்போலோ மருத்துவமனையின் உறுப்பு மாற்று ஒருங்கிணைப் பாளருமான நிவேதிதா, “இந்த விஷயத்தில் மூன்று வகையான குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்று ஆரம்பத்திலேயே மறுத்துவிடு வார்கள். பிரியமானவர்களின் உடல் வெட்டுப்படுவதை மனோரீதியாக அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி அழுத்தமாக மறுப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மீண்டும் அந்தப் பேச்சையே எடுக்கமாட்டோம்.
அடுத்தது, சிலர் இதனால் சமூகத்துக்கு என்ன பலன் என்று கேட்பார்கள். அவர்களிடம் ’உங்களிடம் பெறும் உடல் உறுப்புகள் பலரை வாழ வைக்கப்போகிறது’ என்பது உட்பட விரிவான விளக்கங்களை அளிப்போம். பின்பு ஏற்றுக்கொள்வார்கள். சிலர் ஏற்கெனவே இதுகுறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். ஆனால், யாரும் அணுகாத வரை அந்த யோசனையே அவர்களுக்கு வராது. நாங்கள் சொன்னவுடன் உடனடியாக இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.” என்கிறார்.
உடல் உறுப்பு தான ஆலோசகர் மிகவும் பொறுமையாகவும் 24 மணி நேரமும் தயாராகவும் இருக்க வேண்டும். இது வெறும் வேலை அல்ல. அதையும் தாண்டிய சேவை.” என்கிறார் மற்றொரு ஆலோசகரனான சுமிதா.
வழிகாட்டும் தமிழ்நாடு
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் உறுப்பு தானங்கள் அதிகபட்சமாக நடந்துள்ளன. திருச்சி , மதுரை, கோவை மாவட்டங்களில் கொடையாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் நடந்த உறுப்பு தானங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிற்சிப்பட்டறை சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில், தமிழ்நாடு உறுப்பு தான திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான, ஜே. அமலோர்பவநந்தன் பேசுகையில், “அப்போலோ மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை தவிர மற்ற மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 கொடையாளிகள் மட்டுமே இருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு 55ஆக உயர்ந்துள்ளனர். இதில் திருச்சி, கோவை , மதுரை மாவட்டங்களிலிருந்து அதிக தானங்கள் வர தொடங்கியுள்ளன” என்றார். இதற்கு மக்களிடம் பெருகி வரும் விழிப்புணர்வே காரணம் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா மாநிலங்கள் பங்கு கொண்டன. தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இது போன்ற அனுபவ பகிர்வு நிகழ்ச்சிகள் மிகவும் அவசியம். இவை கொள்கை சிக்கல்களை களைய உதவும்” என்றார். மேலும் உறுப்பு தானம் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய உறுப்பு தான வழிகாட்டி எனும் கையேட்டையும் வெளியிட்டார்.
தமிழ்நாடு அதிகாரிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் முதன்மை செயலர், தாவிதர் பேசுகையில் , “இத்திட்டத்தின் உண்மையான ’ஹீரோக்கள்’ உறுப்புதான ஆலோசகர்கள் தான். இந்த பகிர்வின் மூலம் அரசை மையமாக கொண்ட ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதோடு இழப்பின் நேரத்தில் உறுப்பு தானம் செய்ய முன் வரும் குடும்பங்களை அங்கீரிக்க வேண்டும்.” என்றார்.