

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 30-ம் தேதி நிறைவுபெற்றது. எனவே, தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ரோசய்யா, கடந்த 2011 ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார்.
அவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. ஆனாலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படாததால் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்படும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
74 வயதான வித்யாசாகர் ராவ், 1942 பிப்ரவரி 12-ம் தேதி தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் பிறந்தார். வினோதா என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வழக்கறிஞரான ராவ், சிறுவயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பில் பணியாற்றினார்.பாஜகவில் இணைந்து 3 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை எம்.பி. யாகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2004 வரை மத்திய அரசில் உள்துறை, தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சராக பணி யாற்றியுள்ளார். வித்யாசாகர் ராவ் இன்று அல்லது நாளை பதவியேற் பார் என ஆளுநர் மாளிகை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.