கவர்ச்சி திட்டங்கள் மூலம் 70,000 பேரிடம் ரூ.100 கோடி வசூல்: எம்.ஆர்.டி.டி. நிதி நிறுவனத்தை முடக்க காவல்துறை தீவிரம்

கவர்ச்சி திட்டங்கள் மூலம் 70,000 பேரிடம் ரூ.100 கோடி வசூல்: எம்.ஆர்.டி.டி. நிதி நிறுவனத்தை முடக்க காவல்துறை தீவிரம்
Updated on
2 min read

மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எம்.ஆர்.டி.டி. நிறுவனம் கவர்ச்சி திட்டங்கள் மூலம் 70,000 பேரிடம் இருந்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஸ்பர்மேஷன் இந்தியா லிட் (எம்.ஆர்.டி.டி.) என்ற நிறுவனம் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு 2009-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. கவர்ச்சி திட்டங் களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருவதாக இந்நிறுவனத்தின் மீது வெற்றிவேல் என்பவர் கடந்த மாதம் மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அலெக்ஸ், இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் அது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பொதுமக்களின் பணத்தை டெபாசிட், பங்குகளாக பெற ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் அனுமதியை பெறவில்லை என்பதும், கம்பெனிகள் பதிவு சட்டத்தின்படி மட்டும் பதிவு செய்துவிட்டு அதைக் காட்டி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து இந்நிறுவனத்தின் தலைவர் எம்.சுரேஷ்பாபு, செயலா ளர் முத்துராஜு, பொதுமேலாளர் தமீம், மனிதவள மேலாளர் வீரராஜலிங்கம், இயக்குநர் குமார், தலைமை நிர்வாக அலுவலர் ராமரத்தினம், பயிற்சி யாளர்கள் செந்தில்குமார், சிவ குமார், சட்ட ஆலோசகர் சேக் அப்துல்லா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள், தங்களைக் கைது செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை மூலம் தடை ஆணை பெற்றனர்.

அதைத் தொடர்ந்து நிறுவனத் தின் மீதான பிற நடவடிக்கைகளை போலீஸார் துரிதப்படுத்தினர். முதல் கட்டமாக எம்.ஆர்.டி.டி. நிர்வாகிகளின் பெயரில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.18.86 கோடியை தற்போது முடக்கி யுள்ளனர். இதைத் தொடர்ந்து பிற மாவட்டங்களில் உள்ள சொத்துகள், வங்கி கணக்குகளையும் முடக்க உள்ளனர்.

இது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘எம்.ஆர்.டி.டி. நிறுவனத்தால் பல பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த நிதி நிறு வனம் தொடர்ந்து செயல்படக் கூடாது என ரிசர்வ் வங்கி, சிபி ஏற்கெனவே எச்சரிக்கை செய் துள்ளது. அதையும் மீறி தொடர்ந்து இந்த நிறுவனம் பல கிளைகளை ஆரம்பித்து, தொடர்ந்து மக்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

அனைத்து மாவட்டத்துக்கும் தகவல்

இந்த நிறுவனத்துக்கு மதுரையில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் குறித்து அனைத்து மாவட்ட எஸ்.பி-க்கள், மாநகர காவல் ஆணையர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இந்நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள 389 ஏக்கர் நிலத்தினை விற்கவோ, பிற செயல்பாடுகளை மேற்கொள்ளவோ அனுமதிக்க வேண்டாம் என பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட குற்றப்பிரிவைத் தொடர்ந்து நாகர்கோவில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும் இந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எம்.ஆர்.டி.டி நிறுவன இயக்குநர் குமாரிடம் செல்போனில் கேட்டபோது, முக்கிய வேலையாக இருப்பதால் இப்போது பேச முடியவில்லை. நாளை (இன்று) இது பற்றி விரிவாக கூறுகிறேன் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

பெரும் மோசடி தவிர்ப்பு

இதுபற்றி மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரி கூறும்போது, ‘கவர்ச்சி திட்டங்கள் மூலம் ஆரம்பத்தில் அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு பின் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிடுகின்றன. இந்த நிறுவன நிர்வாகிகளின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in