

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணி திருவாரூர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், அழிக்கப்பட வேண்டிய பகுதிகள் ஏராளமாக உள்ளன. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் திட்டமிடுவதற்குள் தன்னார் வத்துடன் ஏராளமான இளைஞர்கள் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மன்னார்குடி, வடுவூர் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் உட்பட மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான இயந்திர உதவி மற்றும் உணவு, குடிநீர் போன்றவற்றை அந்தந்தப் பகுதி மக்கள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வடுவூரில், வாட்ஸ் ஆப் குழு ஒன்றின் மூலம் இணைந்த அப்பகுதி இளைஞர்கள், கோதண்டராமர் கோயில் பின்புறப் பகுதியில் உள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை தன்னார்வத்துடன் அழித்துள்ளனர்.
தினமும் சுழற்சி முறையில் 20 பேர் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். தேவையான இடங்களில் பொக்லைன் இயந்திரங்களையும் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து வடுவூர் ஸ்டேடியம் மற்றும் வடுவூர் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல, முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாட்டிலும் அந்த கிராம மக்கள் சீமைக் கருவேல மரங்கள் அழிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடை பெற்றது. சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் கே.வி.கண்ணன் வரவேற்றார்.
ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சமூக ஆர்வலர் முகமது மாலிக் சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த பணியில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மன்னார்குடியில் மன்னையின் மைந்தர் என்ற அமைப்பும் சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது.
இதேபோல, திருவாரூர் மாவட் டத்தில் பரவலாக இளைஞர்கள் சீமைக் கருவேல மரங்கள் அழிப்புப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை வருவாய்த் துறை மூலம் அடையாளம் கண்டு, அந்த இளைஞர்களைப் பாராட்டி ஆட்சியர் சான்றிதழ் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் சீமைக் கருவேல மரங்கள் அழிப்புப் பணியில் மேலும் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.