

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
ராமதாஸின் மகன் வழிப் பேத்தி (அன்புமணி ராமதாஸ் மகள்) சம்யுக்தா சௌமியா அன்புமணிக்கும், ராமதாஸின் மகள் வழிப் பேரன் ப்ரித்தீவன் பரசுராமனுக்கும் மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இரவு சுமார் 7.30 மணிக்கு விழா அரங்குக்கு வந்த மு.க.ஸ்டாலின் மேடையில் இருந்த மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு அவரை அருகேயிருந்த முக்கியப் பிரமுகர்களுக்கான உணவுக் கூடத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அழைத்துச் சென்றார்.
அதனையடுத்து சற்று நேரத்துக்குப் பின்னர் வைகோ அரங்குக்கு வந்தார்.
மணமக்களை வாழ்த்திய பிறகு வைகோவையும் மு.க.ஸ்டாலின் இருந்த அறைக்கு ஜி.கே.மணி அழைத்துச் சென்றார்.
அங்கு இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். சில நிமிட சந்திப்புக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றனர்.
பா.ம.க. தலைவரின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின், வைகோ சந்தித்துப் பேசிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாகக் கூடும் என்ற யூகங்களை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “வைகோவுடன் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது” என்றார். “இதனை புதிய கூட்டணிக்கான சந்திப்பாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உங்கள் விருப்பம் அதுதான் என்றால், அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.
சந்திப்பு பற்றி வைகோ கூறும்போது, “தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் நான் விசாரித்தேன். எனது தாயார் உடல் நலம் பற்றி என்னிடம் ஸ்டாலின் விசாரித்தார். இது அரசியல் நாகரிகமான சந்திப்பு” என்றார்.
“கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சியே” என்று ஸ்டாலின் கூறியது பற்றி வைகோவின் கருத்தை கேட்ட போது, “ஸ்டாலின் அவ்வாறு விரும்பினால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று கூறினார்.