

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களின் முணுமுணுப்பை, இந்த முறையும் கிளப்பி விட்டிருக்கிறது தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்.
புத்தகக் காட்சியில் சுற்றோ சுற்று என்று சுற்றிவிட்டு, வயிற்றுப் பசியோடு அசந்து மசந்து கேன்டீன் பக்கம் ஒரு சாமானியர் போனால், சாப்பிட வேண்டாம்; விலைப் பட்டியலைப் பார்த்தாலே போதும்; பசி பறந்துவிடும்.
ஆனால், மயக்கம் வந்தால் ஆச்சர்யப்பட வேண்டியது இல்லை; விலை அப்படி. வெளியில் இதே நந்தனத்தில் ரூ.30க்குக் கிடைக்கும் தயிர் சாதம், சாம்பார் சாதம் விலை புத்தகக் காட்சி கேன்டீனில் முறையே ரூ.50; ரூ.60. தவிர, குடிக்க ரூ.10 தனியே கொடுத்துத் தண்ணீர் வாங்கிக்கொள்ள வேண்டும்.
புத்தகக் காட்சியின் ஒவ்வோர் அம்சத்திலும் வாசகர்களிடம் பணம் பார்க்க வேண்டும் என்று புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்கள் எண்ணுவது சரியா? இது புதிதல்ல; ஆனால், வாசகர்களின் புலம்பலுக்கு ஒருபோதும் ஏற்பாட்டாளர்கள் காது கொடுப்பதில்லை.
ஒரு வாசகர் இப்படிக் கேட்டார்:
“சராசரியா ஒரு வாசகர் 500 ரூபாய்க்குப் புத்தகம் வாங்குறார்; ஒரு சாம்பார் சாதம் சாப்பிடுறார்னு வெச்சுக்குவோம். வாசகரால உங்களுக்கு 560 ரூபாய் வியாபாரம் நடக்குது. புத்தகக் காட்சியில நீங்க 10% தள்ளுபடியா 50 ரூபாய் அவருக்குத் தர்றீங்க. ஆனா, நுழைவுக் கட்டணம் 10 ரூபாய்; கேன்டீன்ல கூடுதல் விலை ரூபத்துல 40 ரூபாய்னு பிடுங்கிட்டா, வாசகருக்கு இதில் என்ன லாபம்? இதை எல்லாம் ஏற்பாட்டாளர்கள் யோசிக்கணும்.”
யோசிப்பார்களா?