கோவை: பிச்சையெடுக்க குழந்தைகளை பாடாய்ப்படுத்தும் பெற்றோர்

கோவை: பிச்சையெடுக்க குழந்தைகளை பாடாய்ப்படுத்தும் பெற்றோர்
Updated on
2 min read

‘கோவை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த, நாங்கள் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும், பெற்றோர்களின் துணை இல்லாமல் அது சாத்தியப்படாது’ என்கின்றனர் குழந்தைத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்.

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையே கல்நெஞ்சம் படைத்தவர்களாக பார்க்கிறோம். ஆனால் அதையும் தாண்டி, குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தும், சில பெற்றோர்கள் சம்பாதிக்கின்றனர். எவ்வளவு தான், கண்டித்தாலும், தண்டித்தாலும் சில நாட்களில், மீண்டும் அதே வேலையில் குழந்தைகளை அவர்கள் ஈடுபடுத்துவது வேதனைக்குரியதாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும், குறிப்பிட்ட சில இனங்களைச் சேர்ந்த மக்களின் இந்த செயல்பாட்டால், குழந்தைத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக, பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தாறுமாறாக இருந்தது. அது தற்சமயம், அதிகாரிகளின் நடவடிக்கையால் வெகுவாக குறைந்துள்ளது. கோவை காந்திபார்க், சிங்காநல்லூர் பகுதிகளில் தற்காலிக குடியிருப்பை அமைத்து தங்கியுள்ள நாடோடி மக்கள், இசைக்கருவிகளை ஒலித்து, குழந்தைகள் மூலம் சாகசங்களைச் செய்து பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அவர்கள், தங்களது குலத்தொழிலாக வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.புரம், சாயிபாபா காலனி, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட ஜன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இவர்களது எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வித்தை காட்டுவது , சாட்டைகளால் அடித்துக் கொண்டும், கையை அறுத்துக் கொண்டும், குழந்தைகளை கொடுமைப்படுத்தி மக்களிடம் கையேந்த வைக்கின்றனர். அதேபோல, கோவை மதுக்கரை பகுதியிலும் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்களும் தங்களது குலத்தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில், எப்போதும் பயணிகளை நச்சரித்து, காலில் விழுந்து காசு கேட்கும் குழந்தைகள் ஏராளம். தர மறுக்கும் நபர்களின் கால்களை விடாமல் பிடித்து, எப்படியாவது காசு வாங்கிவிடுவர். அங்கே ஊசி, பாசி, சீப்பு உள்ளிட்ட சிறுசிறு பொருட்களை விற்கும் நபர்களே, அவர்களின் பெற்றோர்களும், முதலாளிகளும். இவர்களின் ஆதிக்கம் தற்போது காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட முக்கியப் பேருந்து நிலையங்களில் அதிகரித்துவிட்டது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த வாரம், பொள்ளாச்சியில் இருந்து ஒரு நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கள அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அதில் 3 சிறுமிகளையும், ஒரு சிறுவனையும் மீட்டனர். கோவையில் இதுபோல ஏராளமான சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை படிக்க வைக்கிறோம் என்ற உறுதிகொடுத்து அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், மீண்டும் இத்தொழிலுக்கு தள்ளிவிடுகிறார்கள். இதனால், கள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் தொடர்ச்சியான ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்.

காவல்துறை ஒத்துழைப்புடன் நாங்கள் ஆய்வு மேற்கொண்டு, கவுன்சிலிங் கூட கொடுக்கிறோம். ஆனால், அதன்பின் மீண்டும் குழந்தைகளை வைத்தே பிச்சையெடுக்க துணிகின்றனர். அதிகாரிகளையும், கள அலுவலர்களையும் பார்த்தாலே ஓடி ஒளியும் அளவிற்கு, தற்போது பலர் கோவை நகருக்குள் சுற்றித் திரிகிறார்கள். என்ன காரணத்தினாலோ, சில அரசியல் பிரமுகர்கள் கூட இவர்களுக்குச் சாதகமாக பேசுகின்றனர்.

தொழிலை நிர்ணயிக்கும் வயது

2012 ஆம் ஆண்டில் கோவையில் மட்டும் பிச்சையெடுக்க விடப்பட்ட குழந்தைகள், மொத்தம் 20 பேரை மீட்கப்பட்டனர். இந்த வருடம், அவர்களது எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு கணக்குப்படி, இதுவரை 11 பேரை மீட்டுள்ளோம். இதில், பெரும்பாலும் பிச்சையெடுக்க அனுப்பப்படும் குழந்தைகள் 7 வயதுக்கு குறைவாகவே உள்ளனர். பேருந்து நிலையங்களில் காசு கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளைப் பார்த்தாலே இது தெரியும்.

7 வயதுக்கும் மேல் உள்ள குழந்தைகள் சீப்பு, ஊசி உள்ளிட்ட பொருட்களை விற்க ஆரம்பித்துவிடும். காரணம், பொருட்களை விற்று காசாக்குவதில், சற்று விவரம் தெரிந்த ஆளாக இருக்க வேண்டும் என்பதும், பிச்சையெடுக்க அனுதாபம் மட்டுமே தேவை என்பதால் குறைந்த வயதில் இருக்க வேண்டும் என்றும் பெற்றோர்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் குழந்தைகளை வைத்து சிலர் தொழிலாக இதை நடத்துவதாக தகவல் வெளியாகிறது. அது உண்மையெனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு திட்டம்

இவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்குவதில்லை. தங்களுக்கென அரசாங்க ஆவணமோ, பதிவோ இல்லாததால், சம்பாதித்து, வயிற்றை நிரப்ப வேண்டுமென்பதே முக்கியமாக உள்ளது. தற்போது இவர்களுக்கு அரசு இலவச வீடுகளை வழங்கி வருகிறது. அத்துடன் முறையான வழிகாட்டுதல்களை வழங்கி இவர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் இவர்களது குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும். நமது கடமை குழந்தைத் தொழிலை ஒழிப்பது மட்டுமல்ல. அனைவருக்குமான கல்வியை ஏற்படுத்தித் தருவதே. சில தினங்களுக்கு முன்பு, சிங்காநல்லூர் பகுதியில் மொத்தமாக எட்டு குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அனைவருமே பேக்கரி, ஒர்க்‌ஷாப் போன்றவற்றில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள். 14 வயது வரையே குழந்தைத் தொழிலாளர் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதாலும், மீட்கப்பட்ட குழந்தைகள் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதாலும் அவர்கள் குழந்தைகள் நலக்குழு மூலம் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில், தற்போது குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மீட்கப்பட்ட குழந்தைகள் சாதனையாளர்களாக மாறிவரும் விபரம் இப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு தெரியவேண்டும். அதுவே, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவததைத் தடுக்கும் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in