Published : 24 Aug 2016 07:08 PM
Last Updated : 24 Aug 2016 07:08 PM

வறுமை ஒழிப்பு மக்கள் இயக்கமாக மலர வேண்டும்: விஜயகாந்த்

வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''எனது பிறந்தநாளை கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வருகிறேன். தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை 'இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தேமுதிக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும்.

இந்த வருடம் 234 தொகுதிகளிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் நடப்படும் என்பதை அறிவித்துள்ளேன். அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டும், அரசியல் எல்லா துறைகளிலும் தலையீடு இருக்கக்கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வருகின்ற நாம், நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டுசெய்வோம் என்று இந்த பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

தமிழகத்தில் தீராத பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தேமுதிக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். அதே நேரத்தில் வறுமையிலும், விலைவாசி உயர்விலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையிலும் சிக்கித்தவிக்கும் தமிழக மக்களுக்கு உரிய தொண்டாற்றிடும் வகையில் பணியாற்றுவோம். தமிழக அரசியலில் தேமுதிகஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x