

கூவத்தூரில் எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக விடுதிக்குச் சென்ற வருவாய்த் துறை மற்றும் போலீஸாரை படம் பிடிக்கச் சென்ற, செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்கி யதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக் கும் அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சி புரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பகுதியில் கடற்கரையோரம் உள்ள, தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு, அதிமுக எம்எல்ஏக்களிடம் சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவியுங்கள் என, மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜூ ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகவும். இவர்களுக்கு உதவியாக டி.டி.வி.தினகரன் உட்பட சசிகலாவின் உறவினர்களும் ஈடுபட்டுள்ள தாகவும் சசிகலாவின் ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எம்எல்ஏக்களின் நிலைகுறித்து அவர்களிடம் நேரில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நேற்று முன்தினம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. இதன்பேரில், செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த் துறை குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச் செல்வன், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட் உள்ளிட்டோர் தலைமை யிலான போலீஸார், அதிகாலை 6:30 மணியளவில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். அப்போது, வருவாய்துறை மற்றும் போலீஸாரை படம் பிடிப் பதற்காகவும் மற்றும் செய்தி சேகரிப்பதற்காகவும் செய்தியாளர் கள் போலீஸாரின் வாகனத்தைப் பின் தொடர்ந்து விடுதியின் முகப்பு பகுதிக்கு சென்றனர்.
மேலும், வட்டாட்சியர் மற்றும் போலீஸார் விடுதியின் உள்ளே சென்றனர். பாதுகாப்புக்காக விடுதி வாசலில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தப் பட்டிருந்தனர். அப்போது, விடுதி மற்றும் போலீஸாரை ஊடகங்கள் படம் பிடித்ததைப் பார்த்த அதிமுகவினர், செய்தியாளர்கள் மீது கற்களை வீசி தாக்கினர்.
மேலும் செய்தியாளர்களைத் துரத்தி வந்த அதிமுக குண் டர்கள் அவர்களிடம் இருந்த கேம ராக்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கைப்பற்றவும் முயற்சி செய்தனர். இதனால், செய்வதறியாது திகைத்த செய்தியாளர்கள் அப்பகுதியில் இருந்து அச்சத்துடன் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் போலீஸாரின் கண் முன்னாலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.