இலங்கை மீனவர்களுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

இலங்கை மீனவர்களுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
Updated on
1 min read

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கைதான இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க உத்திரவிட்டது.

அக்டோபர் 9ம் தேதி 26 இலங்கை மீனவர்களும், செப்டம்பர் 13ம் தேதி 5 பேரும், அக்டோபர் 30ம் தேதி 24 பேரும், நவம்பர் 6ம் தேதி நான்கு இலங்கை மீனவர்களும் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த 59 மீனவர்களும் இலங்கை புத்தளம், நீர் கொழும்பு மற்றும் கல்பிட்டி பகுதியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். மீனவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் 60 கடல் நாட்டிகல் தொலைவில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பிடிபட்டவர்கள் ஆவார்கள்.

பின்னர் இந்திய எல்லைக்குள் உரிய ஆவணம் இன்றி நுழைந்ததால் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூத்துக்குடி வைகுண்டம், திருநெல்வேலி பாளையங்கோட்டை மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் 59 பேரின் காவல் வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையில் மீனவர்கள் காற்றில் திசைமாறி வந்ததாக தெரிவித்தனர். மீனவர்களை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிபதி தர்மன் மீனவர்கள் 59 பேரையும் ஜனவரி 3வரை காவலில் நீட்டித்து உத்திரவிட்டார்.

இந்திய சிறைகளில் (தமிழகம், ஆந்திரா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில்) 191 இலங்கை மீனவர்கள் கைதிகளாக உள்ளனர். அதேபோல் இலங்கை மீனவர்களின் 36 படகுகளை இந்திய கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in