

‘உங்கள் குரல்’ கோரிக்கைக்கு அதிகாரிகள் பதில்
அரசு இ-சேவை மையங்களில் விரைவில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை அச்சிடும் வசதி கொண்டுவரப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்டலூரைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி என்ற வாசகர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:
தற்போது குடும்ப அட்டைகள் அனைத்தும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல பிழைகள் உள்ளன. மேலும் ஸ்மார்ட் குடும்ப அட்டையில் முகவரி திருத்தம் கோரி செங்கல்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையத்துக்குச் சென்றேன். அங்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை திருத்தம் மேற்கொள்ளும் வசதி இல்லை என்று கூறி எதிரில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு செல்லுமாறு அனுப்பி வைக்கின்றனர். எனவே இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டையை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் அரசு இ-சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் 168 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதற்காக ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எழுத்துப் பிழையாக இருந்தால், அவர்களின் பழைய அசல் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையையே ஆதாரமாக கொடுக்கலாம். முகவரி மாற்றமாக இருந்தால், அதற்கான இருப்பிட சான்று அல்லது வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வழங்கலாம்.
ஸ்மார்ட் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, அதை இ-சேவை மையங் களிலேயே, ஆதார் அட்டை, வண்ண வாக்காளர் அட்டை போன்று அச்சிட்டு வழங்கும் வசதியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சேவை, சென்னையில் தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் இயங்கும் இ-சேவை மையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் இயங்கும் மையங்களில் கிடைக்கும். இதற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவை, மாநிலம் முழுவதும் மொத்தம் 650 இ-சேவை மையங்களில் மட்டும் வழங்கப்படும்.
தற்போது குடும்ப அட்டை திருத்தும் சேவை, அனைத்து இ-சேவை மையங்களிலும் சிறப்பாக வழங்கப்படுகிறது. நேற்று ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் 400 பேர் ஸ்மார்ட் குடும்ப அட்டை திருத்தம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அந்த மையத்தில் எதற்காக திருப்பி அனுப்பினர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.