Published : 28 Oct 2014 02:37 PM
Last Updated : 28 Oct 2014 02:37 PM

ஒரு நாள் நானும் சமுதாயத்துல பெரிய மனுஷனா வருவேன்: நம்பிக்கை தளராத கோவை ரமேஷ்குமார்

ரமேஷ்குமாரை ஒரு மூட்டையை கட்டித் தூக்கி வருவது போல்தான் தூக்கி வந்து உட்கார வைக்கிறார்கள். பிறவியிலேயே கால்கள் சூம்பிப்போய் செயலிழந்து முடங்கிப்போன இவரால் இப்போது கைகளால் மட்டுமே தவழ்ந்து வர முடியும். ஆனாலும், இமயத்தை தொட்டுவிடும் தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். ஸ்பின்னிங் மில் தொழிலாளியின் மகன். முப்பது வயது வரை பெற்றோரின் நிழலில் தவழ்ந்து திரிந்த இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்துவிட்ட பிறகு சிக்கல் ஆரம்பமானது.

ஆதரவற்று நின்ற தம்பியை உடன்பிறந்த சகோதரிகள் தங்களோடு வைத்துக்கொள்ள நினைத்தார்கள். ஆனால் அதனால், புகுந்த வீட்டுக்குள் தேவையற்ற பிரச்சினைகள். விளைவு..? திக்குத் தெரியாமல் தனி மரமாகிப் போனார் ரமேஷ்குமார். அப்புறம் நடந்தவற்றை அவரே நமக்கு விவரிக்கிறார்.

“என்னைய நல்லா படிக்க வைக்கணும்னு அம்மாவுக்கு ஆசை. ஆனா, இங்கே இருக்கிற பள்ளிக் கூடங்கள்ல ‘யாருமில்லாத அநாதைன்னு எழுதிக் குடுங்க. அப்பத்தான் ஹாஸ்டல்ல சேர்த்துக்குவோம்’னு எழுதிக் கேட்டாங்க. `எம்புள்ள அநாதை இல்லை’ன்னு சொல்லிட்டு எங்கம்மா என்னைய வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அக்கா ரெண்டு பேரும் சொல்லிக் குடுத்தத வைச்சு கொஞ்சம் படிச்சுக்கிட்டேன்.

அம்மா - அப்பா இறந்த பின்னாடி அக்காக்களுக்கு என்னை அவங்களோடு வைச்சுக்க விருப்பம்தான். ஆனா, அவங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு அது பிடிக்கல. நம்மாள அவங்களுக்கு ஏன் பிரச்சினைன்னு வைராக்கியத்தோட வெளியில வந்துட்டேன்.

அவங்களுக்கு முன்னால பேரு சொல்றாப்புல வாழ்ந்து காட்டணும்னு நினைச்சேன். கருணை இல்லத்துல எனக்கு அடைக்கலம் குடுத்தாங்க.

இயலாமையில இருந்தாலும் பிச்சை எடுத்துப் பிழைக்க எனக்கு இஷ்டம் இல்லை. ஏதாச்சும் தொழில் செஞ்சு பொழைக்கணும்னு நினைச்சேன். என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டு கருணை இல்லத்துக்காரங்களும் லயன்ஸ் கிளப்காரங்களும் மொத்தமா 70 ஆயிரம் பணம் புரட்டிக் குடுத்தாங்க. அதை வைச்சு. சின்னதா ஒரு செருப்புக் கடையை ஆரம்பிச்சேன். இன்னைக்கி அந்தக் கடையை வைச்சு தினம் ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்கிறேன். எனக்குத் துணையா மன நலம் குன்றிய ஒரு நபரை வேலைக்கும் வைச்சிருக்கேன்.

ஒரு ஆட்டோக்காரரோட வீட்டுலதான் நான் இப்ப குடியிருக்கேன். அதுக்காக அவரு என்கிட்ட வாடகை கூட வாங்கிக்கிறது இல்லை. தினமும் அவருதான் வீட்டுலருந்து கடைக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு மறுபடியும் கூட்டிட்டுப் போவாரு.

கடையை விரிவுபடுத்த வேண்டும்

இந்தக் கடையை இன்னும் விரிவுபடுத்தணும். நம்ம நல்லபடியா முன்னுக்கு வரணும் நம்மைப் போல இயலாமையில் இருக்கிற பலபேரை கைதூக்கி விடணும் இதுதான் என்னோட ஆசை.

ஆனா, எனக்கு பேங்குல கடன் குடுக்க மறுக்குறாங்க. இப்பக்கூட ஒரு செருப்புக் கம்பெனியில இருந்து நேரடியா சரக்கு எடுத்து விக்கிறதுக்கு டெபாசிட் கட்டச் சொல்றாங்க. யாராச்சும் அந்தக் தொகையை கட்டி உதவுனாங்கன்னா என்னால இன்னும் அதிகமா உழைச்சு கூடுதலா சம்பாதிக்க முடியும்.

இப்ப வேணும்னா மத்தவங்களுக்கு நான் சாதாரண ஆளா தெரியலாம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் நானும் சமுதாயத்துல பெரிய மனுஷனா வருவேங்கிற நம்பிக்கை இருக்கு’’ நம்பிக்கை துளிர்க்க பேசினார் ரமேஷ்குமார்.

தொடர்புக்கு: 99448-71680

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x