

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம், நேற்று வெளியானது. பெரம்பலூர் மாவட்டத்தில் கிருஷ்ணா, ராம், சாமி ஆகிய 3 திரையரங்குகளில் இப்படத்தை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கும் அதிகமான விலையில் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் திரையரங்குகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கோட்டாட்சியரை சந்தித்து, கபாலி படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால், கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், “அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்யக் கூடாது. அதை மீறி விற்பனை செய்தால், திரையரங்க உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ரசிகர்கள் சோகம்
இதனால், கபாலி திரைப்படத்தை பெரம்பலூரில் வெளியிடுவதில்லை என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். பெரம்பலூரில் கபாலி படம் திரையிடப்படவில்லை என்ற தகவல் நேற்று அதிகாலை தான் ரஜினி ரசிகர்களுக்குத் தெரிந்துள்ளது.
இதனால் கடும் சோகத்துக்கு உள்ளான ரசிகர்கள், கபாலி படத் துக்காக தயார் செய்த கட்-அவுட், பேனர்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.