

பாளையங்கோட்டை சிறையில் ஜாதி மோதலை ஏற்படுத்தி கொல்ல சதி நடைபெறுவதால் அட்டாக் பாண்டியை மதுரை சிறைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் கொலையில் கைதான அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மதுரை, அருப்புக்கோட்டை, திருச்செந்தூர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறும்போது பாளை சிறையில் இருந்து அட்டாக்பாண்டி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந்நிலையில் அட்டாக்பாண்டியை பாளை சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிடக்கோரி அவரது மனைவி பி.தயாளு உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் என்.இளங்கோ மூலம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அட்டாக்பாண்டியை சிறையில் வைத்தோ, நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போதோ கொலை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். பாளை சிறையில் கைதிகள் ஜாதி வாரியாக பிரித்து அடைக்கப்பட்டுள்ளனர். பாளை சிறையில் ஜாதி மோதலை ஏற்படுத்தி அந்த மோதலில் அட்டாக்பாண்டியை கொலை செய்ய சதி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை சிறை உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தன்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என மதுரை, அருப்புக்கோட்டை நீதிமன்றங்களில் ஆஜரான போது நீதித்துறை நடுவர்களிடம் என் கணவர் நேரிலும், கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதை நீதித்துறை நடுவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
என் கணவரை மதுரை சிறைக்கு மாற்றம் செய்ய ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, என் கணவரின் மனுவை பரிசீலிக்க சிறைத்துறை ஐ.ஜி.க்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அட்டாக்பாண்டியின் மனுவை தள்ளுபடி செய்து சிறைத்துறை ஐ.ஜி. 19.11.2015-ல் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து என் கணவரை பாளையங்கோட்டை சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.