

இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்பட 4 தீர்மானங்கள், சென்னையில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'டெசோ' அவசரக் கூட்டம், அமைப்பின் தலைவரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டெசோ அமைப்பின் உறுப்பினர்களான திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
4 தீர்மானங்கள்:
இலங்கைத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலக்கட்டத்தை விரைவுபடுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. குழுவின் விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கும், அந்தக் குழுவுக்கு அதற்கான விசாவினை வழங்குவதற்கும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
ராஜபக்சேவுக்கு அனுமதி கூடாது!
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் ஐ.நா-வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அவர்களுடைய விசைப்படகுகளை மீட்டுத் தருவதோடு, அவர்கள் நெடுங்காலமாக சந்தித்து வரும் துயரங்களுக்கு முடிவுகட்டவும், நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரதமருக்கு பாராட்டு:
பிரதரமர் நரேந்திரமோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முன்வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்திருக்கிறது என டெசோ கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நான்கு தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் சென்னையில் செப்டம்பர் 3-ம் தேதி காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டெசோ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.