

'ஸ்கிரோம்ஜெட்' சோதனை வெற்றிகரமாக செய்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மற்றொரு மைல்கல் சாதனையாக காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் நவீன ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 'ஸ்கிரேம்ஜெட்' என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் பரிசோதனை வெற்றி பெற்றதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.சிவன் இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய சாதனை என்று பாராட்டியதோடு, இதுவரை அமெரிக்கா, சீனா போன்ற ஒருசில நாடுகள் மட்டுமே இப்படிப்பட்ட தொழில்நுட்பச் சோதனையை செய்துள்ளன.
தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இப்போது இந்தியாவில் இருந்து 18 மணி நேரம் பயணித்து செல்லக் கூடிய அமெரிக்காவுக்கு ஒருமணி நேரத்தில் சென்றுவிட முடியும் என சிவன் கூறியிருக்கிறார். இந்த வெற்றிக்கும், சிறப்பான ஆராய்ச்சிக்கும் காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் திமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.