

துரைப்பாக்கத்தில் ஹோட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் துரைப்பாக்கம் அருகே ஒக்கியம்பேட்டையில் தலப்பாக்கட்டி பிரியாணி கடை உள்ளது. இந்த ஹோட்டலுக்கு பாதாள சாக்கடை வசதி இல்லாததால், ஹோட்டலின் பின்பகுதியில் தரையில் குழி தோண்டி பெரிய தொட்டி கட்டி அதில் கழிவுநீரை விடுகின்றனர். தினமும் லாரிகள் மூலம் இந்த கழிவுநீர் அகற்றப்பட்டு பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விடப்படும். வழக்கம்போல நேற்று காலையில் ரவி என்பவருக்கு சொந்தமான லாரியில், கழிவுநீரை மோட்டார் மூலம் குழாய் போட்டு உறிஞ்சி லாரியில் ஏற்றினர்.
கண்ணகி நகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன் (25), இவரது அண்ணன் குமார் (45), இவர்களின் மைத்துனர் கிளீனர் முருகன் (23), விஜி (35) ஆகியோர் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். திருச்சியை சேர்ந்த ராஜேஷ் (20) என்ற ஹோட்டல் ஊழியர் இந்த பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். 2 லோடு கழிவுநீர் அகற்றப்பட்ட நிலையில், “கழிவுநீர் தொட்டியின் அடியில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை தூர்வார வேண்டும். அதற்கு தனியாக பணம் தருகிறோம்” என்று ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து குமார், முருகன் ஆகியோர் முதலில் தொட்டிக்குள் இறங்கினர். அங்கு பரவியிருந்த விஷவாயுவை சுவாசித்த இருவரும் மயங்கி தொட்டிக்குள்ளேயே விழுந்தனர். உள்ளே சென்றவர்கள் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அவர்களை காப்பாற்ற சரவணன், விஜி, ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்க, அவர்களும் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.
தகவலின்பேரில் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாதுகாப்புக் கவசங்களுடன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கிக் கிடந்த 5 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சரவணன், குமார், முருகன், ராஜேஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். விஜி மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கண்ணகி நகர் போலீஸார் விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோத னைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அடையாறு காவல் துணை ஆணையர் கண்ணன், சோழிங்க நல்லூர் வட்டாட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கண்ணகி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
3 பேர் கைது
பணியில் கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி ஹோட்டல் மேலாளர் நவீன்(29), காசாளர் சரவணன்(20), டெலிவரி பாய் தினகர்(29) ஆகிய 3 பேரை கண்ணகி நகர் போலீஸார் நேற்று கைது செய்தனர். கழிவுநீர் பராமரிப்பு பணிகளில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை தவிர்க்கும் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு
கழிவுநீர் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது. இதற்கான இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தடையையும் மீறி பல இடங்களில் கழிவுநீர் குழாய் களுக்குள் மனிதர்களை இறக்கி பலர் வேலை வாங்குகின்றனர். இதனால் ஆண்டுக்கு 200 பேர் வரை மரணம் அடைவதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் விளக்கம்
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னைக் குடிநீர் வாரியம் கழிவுநீர் கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தூர்வாரும் இயந்திரங்கள், ஜெட் ராடிங் இயந்திரங்கள் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு கழிவுநீர் பராமரிப்புப் பணிகளில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை தவிர்க்கும் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கூறிய பணிகளுக்கு தொழிலாளர்களை நேரடியாக பயன்படுத்துவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் வாரியத்தில் உள்ள பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் இது குறித்து கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நடைமுறைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் பணியானை வழங்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.