

அதிமுக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதள தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) அத்துமீறி நுழைந்து, தாங்கள் ஹேக் செய்த தகவலைப் பதிந்தனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org - இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் ஹேக்கர்கள், ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு, அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்தனர். அதில், இஸ்லாம் ஜிந்தாபாத், இஸ்லாமியர்கள் வாழ்க, பாகிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களைப் பதிந்துவிட்டு, இதை ஹேக் செய்தது "HACKED BY H4$N4!N H4XOR" என்று குறிப்பிட்டனர். தங்களுக்கு நீதியும் அமைதியும் வேண்டும் என்று அதிமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, Hasnain1337@gmail.com என்ற இ-மெயில் ஐடியை பதிவு செய்தனர். இந்த இணையத் தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதேபோல், jayatv.tv என்ற வலைத்தளத்தையும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் அத்துமீறி தாக்கினர். ஆனால், அது தமது அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலுக்கான வலைத்தளம் அல்ல; jayanewslive.in, jayanetwork.com ஆகியவை அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் என்று ஜெயா டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.