கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் இலவச பயிற்சி

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் இலவச பயிற்சி

Published on

பேரவையில் நேற்று தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.மணிகண்டன் பேசியதாவது:

பல பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள தமிழ்நாட்டை புதிய கண்டுபிடிப்புகளின் அறிவுசார் மையமாக மாற்றும் வகையில், உடனடியாக பணியமர்த்தக் கூடிய தொழில் அணுகுத்திறன் பெற்ற ஆற்றல்மிக்க மனிதவளம் உருவாக் கப்படுவது அவசிய மாகும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் துறைக்கான திறன் தேவை குறித்த பகுப்பாய்வின் அடிப்படையில், தமிழ்நாடு ஐசிடி நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் திறன் மற்றும் மென்திறன் அடங்கிய ஒரு சிறந்த வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் துறையில் தொடக்க நிலை வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும். மொத்தம் 150 மணி நேர வகுப்புகளைக் கொண்ட இப்பயிற்சிகளில் கிராமப்புற, ஆதிதிராவிட, பழங்குடியின மற் றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு முன் னுரிமை அளிக்கப்படும். இப் பயிற்சிக்கான செலவினம் முழு வதையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏற்கும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து முகவரிகளையும் விரைவாகக் கண்டறியும் வகையில் அனைத்து முகவரிகளுக்கும் தரப்படுத்தப் பட்ட டிஜிட்டல் முகவரி எண் உரு வாக்கப்படும். மின் கையொப்பம் என்பது இணையத்தின் வழியாக ஆவணங்களில் மக்கள் கையொப்பமிட வழிவகுக்கும் டிஜிட்டல் கையொப்பமாகும். இதன்மூலம் வன்பூட்டு (USB), ஸ்மார்ட் கார்டு இல்லாமலேயே அரசின் அனைத்து இணையவழி சேவைகளை முழுவதுமாக வழங்க முடியும்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு களில் 2 ஆயிரத்து 368 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. 2015-16ல் மென்பொருள் ஏற்றுமதி ரூ.98 ஆயிரத்து 117 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டு களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 32 லட்சத்து 35 ஆயிரத்து 894 பேருக்கு ரூ.4 ஆயிரத்து 893 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 2016-17ம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 514 மடிக்கணினிகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

70 லட்சத்து 52 ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்ட அரசு கேபிள் டிவி நிறுவனம், 2015-16ல் ரூ.32 கோடியே 60 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2016-ல் நாட்டிலேயே அதிக அளவில் 17 லட்சம் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கியதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் மத்திய அரசு விருதைப் பெற்றுள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in