Published : 23 Mar 2014 07:20 PM
Last Updated : 23 Mar 2014 07:20 PM

இலங்கை தம்பதி கடத்தப்பட்ட வழக்கு: சென்னை போலீஸுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் பாராட்டு

இலங்கை தம்பதி கடத்தப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட இருவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், சிறப்பாக செயல்பட்டு தம்பதியை மீட்ட சென்னை மாநகர போலீஸுக்கு பாராட்டு தெரிவித்தது.



இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் கணபதி பிள்ளை தவராஜா, மனைவி சலஜா மற்றும் மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். தவராஜாவும் சலஜாவும் கடந்த ஆண்டு மே 29-ம் தேதி சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள், திடீரென மாயமாயினர்.

அதன்பிறகு லண்டனில் உள்ள அவர்களது மகள் தர்ஷினியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ‘உன் பெற்றோரை கடத்தி வைத்திருக்கிறோம். அவர்களை உயிருடன் விடுவிக்க வேண்டுமெனில் ரூ.3 கோடி தர வேண்டும்’ என மிரட்டினர்.

அதிர்ச்சி அடைந்த தர்ஷினி, இதுகுறித்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தனிப்படை அமைத்து விசாரித்த போலீஸார், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லண்டன்வாழ் இலங்கை தம்பதியரை மீட்டனர். அவர்களைக் கடத்தியதாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சத்யா, கண்ணன், ஆசிரியை இந்திரா உள்பட 13 பேரை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, லண்டன் போலீஸார் சென்னை வந்து விசாரணை நடத்தினர். தவராஜாவிடம் வேலை பார்த்த அஜந்தன், ரமேஷ் சோமலிங்கம் இருவரும் லண்டனில் இருந்தபடி, சதித் திட்டம் வகுத்துக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் லண்டன் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் அஜந்தனுக்கு 9 ஆண்டுகளும், ரமேஷ் சோமலிங்கத்துக்கு ஏழரை ஆண்டுகளும் சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சென்னை போலீஸார் உடனடியாக செயல்பட்டு லண்டன் தம்பதியை மீட்டிருக்காவிட்டால் அவர்களது நிலைமை மோசமாகி இருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தம்பதியை மீட்டதற்காகவும் போதிய ஆவணங்களைத் திரட்டித் தந்து குற்றவாளிகளைப் பிடிக்க உதவியதற்காகவும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸாருக்கு லண்டன் போலீஸார் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x