Published : 31 Oct 2014 10:20 AM
Last Updated : 31 Oct 2014 10:20 AM

3-வது முறையாக பேச்சுவார்த்தை தோல்வி: ஐஒசி காஸ் விநியோகம் முற்றிலும் நிறுத்தம் - சிலிண்டர் கிடைக்காமல் பொது மக்கள் அவதி

சென்னை மணலியில் உள்ள ஐஒசி ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரி 3-வது முறையாக நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதன் காரணமாக மணலி ஐஒசி தொழிற்சாலையில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பணி முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.

மணலியில் உள்ள ஐஒசி மற்றும் ஐஒடிஎல் நிர்வாகத்தில் கடந்த 10 ஆண்டு களாக சிலிண்டர்களை ஏற்றி, இறக்குவது மற்றும் சிலிண்டர்களை லாரிகள் மூலம் கொண்டு செல்வது ஆகிய பணிகளில் 130 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த பணிகளை ஐஒசி நிர்வாகம் காஸ் விநியோகஸ்தர்களிடம் நேரடியாக ஒப்படைத்துவிட்டது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னறிவிப்பு ஏதும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி சிலிண்டர்களை கையாளும் பணியை மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் வழங்கக் கோரி கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் மற்றும் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கத்தினர், ஐஒசி- ஐஒடிஎல் நிர்வாகம், அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்ட காஸ் கையாளும் பணி திரும்பி பெற முடியாது என ஐஒசி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் மணலி தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 130 பேர் இவர்களுடன் சமையல் காஸ்களை நிரப்பும் 40 ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) மணலி தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த ஆமுல்லைவாயல் ஊர் பொது மக்கள், ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் காஸ் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.விஜயன் கூறும்போது, “சமையல் சிலிண்டர்களை கையாளும் பணிகளை செய்து வந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும்'' என்றார்.

மணலி காஸ் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சமையல் காஸ் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x