ராமதாஸ் மீதான அன்பு என்றும் மறைந்ததில்லை: கருணாநிதி

ராமதாஸ் மீதான அன்பு என்றும் மறைந்ததில்லை: கருணாநிதி
Updated on
1 min read

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, மணமக்களை வாழ்த்தியதோடு தனக்கும் ராமதாசுக்கும் இடையேயான நட்பை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். ராமதாஸ் மீதான அன்பு என்றைக்கும் மறைந்ததில்லை என தெரிவித்தார்.

திருமண விழாவில் கருணாநிதி பேசியதாவது, "எனக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் இன்று நேற்றல்ல - பல ஆண்டுக் காலமாக நெருங்கிய பழக்கம் உண்டு. அவர்களுக்கும் எனக்கும் கோபதாபங்கள் ஏற்பட்டாலும், உறவு முறையிலே இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டாலும், அவர் பால் எனக்குள்ள அன்பும், அவருக்கு என் பால் உள்ள அன்பும் என்றைக்கும் மறைந்ததில்லை.

இரண்டு நாட்களாக என் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால்; அதன் காரணமாக நான் மண விழாவுக்கு செல்ல முடியாவிட்டாலும், முதல் நாளே நீ போய் மணவிழா வரவேற்பில், என்னுடைய வாழ்த்துகளையும் இணைத்து, மணமக்களை வாழ்த்தி விட்டு வா என்று தம்பி மு.க. ஸ்டாலினை அனுப்பி வைத்திருந்தேன். அவர் நேற்று வந்து வாழ்த்தியிருக்கிறார். இன்றைக்கு ஸ்டாலினுடைய தந்தை, நான் வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறேன்.

இந்த விழாவினைப் பொறுத்தவரையில், ராமதாஸ் இந்த விழாவிற்கு நான் வர வேண்டுமென்று அழைத்த போது, "நீங்கள் அழைத்தா நான் வர வேண்டும், என்னுடைய பேரன், பேத்தி திருமணத்திற்கு நான் வராமல் வேறு யார் வருவார்கள்" என்று உரிமையோடு சொல்லி, அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் இன்றைக்கு இந்த மணவிழா மேடையில் பல்லாயிரக்கணக்கான பாட்டாளி பெருமக்களைச் சந்திக்கின்ற அரிய வாய்ப்பை பெற்றமைக்காக இந்த வாய்ப்பினை அளித்த மணமக்கள் இல்லத்தாருக்கும், குறிப்பாக என்னுடைய அருமை கெழுதகை நண்பர், சகோதரர் டாக்டர் ராமதாசுக்கும், தம்பி டாக்டர் அன்புமணிக்கும், அவர்களுடைய குடும்பத்தார் மாத்திரமல்ல; இயக்கத்தார் ஜி.கே. மணி உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in