Published : 14 Jun 2016 12:45 PM
Last Updated : 14 Jun 2016 12:45 PM

குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளியில் சேர்க்க மறுப்பு: தூத்துக்குடி மாணவர்கள் குற்றச்சாட்டு

பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வேறு பள்ளிக்கு செல்ல பள்ளி நிர்வா கம் கட்டாயப்படுத்துவதாக, 5 மாணவர்கள் நேற்று தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர் நேற்று ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் அளித்த மனு விவரம்:

நாங்கள் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்தோம். கடந்த 1-ம் தேதி பள்ளிக்கு வழக்கம் போல் சென்றோம். ஆனால், நாங்கள் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் எங்களை பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டனர்.

இதேபோல் 12 மாணவர்களை வேறு பள்ளிக்கு செல்லுமாறு கட்டாயப் படுத்துகின்றனர். இதனால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து படிக்க உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள்

புதியம்புத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த மனு விவரம்: புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோக்களை நிறுத்த போதுமான இடவசதி இருந்தும், வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக ஆட்டோக்களை நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அங்கு ஆட்டோக்களை நிறுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரேஸ்புரம் பெண் மனு

திரேஸ்புரத்தை சேர்ந்த ஆர்.கார்த்திகா என்ற பெண் தனது குழந்தைகளுடன் அளித்த மனு விவரம்: எனது கணவர் ராமர், சங்குகுளி செய்து வந்தார். கடந்த 1.12.2015 அன்று சங்குகுளி தொழில் செய்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார். எனது கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா எங்கள் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க 24.02.2016-ல் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. முதல்வர் உத்தரவிட்டபடி நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முதல்வர் அறிவித்த நிவாரணத்தை வழங்க கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த பெண். (வலது) பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வேறு பள்ளிக்கு செல்ல பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக கூறி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாணவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x