Published : 20 Mar 2017 09:53 AM
Last Updated : 20 Mar 2017 09:53 AM

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை: இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து உடனடியாக சர்வதேச விசாரணை- ஐ.நா கூட்டத்தில் இயக்குநர் கவுதமன் வலியுறுத்தல்

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் கவுதமன் வலியுறுத்தினார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 16-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இயக்குநர் கவுதமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தினரால் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலகின் கண்களை கட்டிவிட்டு இந்தப் படுகொலையை செய்திருக்க முடியாது. இதுதொடர்பான உண்மைகள் வெளிவரத் தொடங்கவே, தான் தவறு செய்துவிட்டதாக ஐ.நா. ஒப்புக்கொள்ளும் நிலை உருவானது.

அதன் அடிப்படையில் ஐ.நா, விசாரணையில் ஈடுபட்டது. அந்த விசாரணை அறிக்கையின்படி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டது நிரூபணமாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதை நிரூபித்து அதன் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.நா.வின் 300 பக்க அறிக்கை மட்டுமே போதும்.

போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிபதிகள் மூலம் இதுவரை இலங்கை அரசு நடத்தவில்லை. இந்நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்காமல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், தனது 2015-ம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் ஒரு சர்வதேச விசாரணையை ஒழுங்கு செய்ய வேண்டும். அதில் மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதி. இதை நிறைவேற்றுவதற்காக ஒரு சர்வதேச விசாரணையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை அரசு நீதி விசாரணை நடத்தும் என்று நம்பவும் முடியாது; அந்த அரசாங்கத்திடம் நீதி விசாரணையை ஒப்படைக்கவும் முடியாது. இலங்கை அரசு கோரும் மேலும் 2 ஆண்டு கால நீட்டிப்புக்கு வாய்ப்பு அளிக்காமல் உடனடியாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு இயக்குநர் கவுதமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x