துபாய் வேலை மோசடி: பாதிக்கப்பட்ட மதுரை பெண்ணின் கண்ணீர் அனுபவம்

துபாய் வேலை மோசடி: பாதிக்கப்பட்ட மதுரை பெண்ணின் கண்ணீர் அனுபவம்
Updated on
1 min read

மதுரை மீனாட்சிபுரத்தை சேர்ந்த தவ்லத் என்ற 45 வயது பெண்மணி துபாயில் வீட்டு வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவரால் மோசடி செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள வறுமை நிலையிலுள்ள குடும்பப் பெண்களை அரேபிய நாடுகளில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்கு அடிமைகளாக விற்கப்படும் அவலம் தொடர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு வஞ்சக வலையில்தான் தவ்லத்தும் சிக்கியிருக்கிறார்.

மதுரை மீனாட்சிபுரத்தை சேர்ந்த நளா முகமதுவின் மனைவி தவ்லத் (45 வயது) ஆலந்துரை சேர்ந்த தரகர் ஒருவரால் துபாயில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டிருகிறார்.

பணத்தை இழந்தது மட்டுமல்லாது கேள்விக்குறியான எதிர்காலத்தோடு சென்னை அறிஞர் அண்ணா விமான நிலையத்தில் ஓமனிலிருந்து வரும் தவ்லத்திற்காக அவரது கணவர் நளா முகமது மற்றும் அவரது மகள் கதுன் ஜரின் ஏமாற்றத்துடனும், சோகத்துடனும் காத்துக்கொண்டிருந்தனர்.

தவ்லத்துடன் சேர்த்து 13 பெண்கள் அதே தரகர் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

மோசடி குறித்து டவ்லத் ’தி இந்து’ விடம் கூறியதாவது:

"எங்களை முதலில் துபாயில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தான் அழைத்து சென்றார்கள். அங்கு சென்றதும் ஓமன் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு விற்றுவிட்டார்கள். அதற்காக எவ்வளவு பணம் கைமாறியது என்பது எங்களுக்குத் தெரியாது.

ஒவ்வொரு நாளும் 20 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக வேறு துன்புறுத்தலுக்கு நான் ஆளாகவில்லை. எனக்கு அரபு மொழி பேசத் தெரியாதது இன்னும் சிக்கலை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒருவழியாக ஓமன் நாட்டில் இருந்த பயண தரகர் அலுவலகத்தைக் கண்டுபிடித்துச் சென்றேன். அங்கே பார்த்த காட்சிகள் இன்னும் கொடுமையாக இருந்தன. என்னைப்போல் பாதிக்கப்பட்ட பெண்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தகுந்த பதில் ஏதும் சொல்லாமல் அவர்களை தரக்குறைவாக திட்டிக் கொண்டிருந்தார் அந்த நபர்.

சில நேரங்களில் அவர் பெண் எனப் பாராமல்கூட அவர்களை அடித்தார். என் துன்பத்தை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் இருந்தேன். எனது நிலையறிந்த குடும்பத்தினர் கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் என்னை மீட்க மனு கொடுத்திருந்தனர். ஒருவழியாக நான் தாயகம் திரும்பிவிட்டேன்" என்றார்.

தவ்லத்தின் மகள் கதுனா ஜரினா கூறுகையில், "மற்ற பெண்களைப் போலவே எனது அம்மாவும் சுற்றுலா விசாவிலே அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்த தரகர் தூதரக அதிகாரிகளிடம் என் அம்மா உறவினரைக் காண வந்துள்ளதாக கூற சொன்னார்" என்றார்.

தவ்லத்திற்கு கடந்த மூன்று மாதமாக வேலைக்கான சம்பளமும் அளிக்கப்படவில்லை. அங்கிருந்து வீடு திரும்ப தவ்லத் விரும்பியதால் ரூ.30,000 வழங்குமாறு அவரைத் தரகர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in