Published : 03 Jan 2016 12:48 PM
Last Updated : 03 Jan 2016 12:48 PM

மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் சாதிக்க முடியும்: நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நம்பிக்கை

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞர் சக்தியை ஒருங்கிணைத்து சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க ‘யாதும் ஊரே…’ என்ற திட்டத்தை நடிகர் சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’ தொடங்கியுள்ளது. ‘இணைவோம்… இணைப்போம்…’ என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், ‘தி இந்து’ குழுமம், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமம் ஆகியவை இணைந்துள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழாவும், ‘சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கமும் சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து நீதிபதி ராமசுப்பிரமணி யன் பேசியதாவது: மனிதன் நீர் நிலைகளை எல்லாம் குடியிருப்புகளாக மாற்றினான். சமீபத் தில் பெய்த மழை குடியிருப்புகளை எல்லாம் நீர் நிலைகளாக மாற்றி இருக்கிறது. நீர்நிலைகளை பாது காக்க வேண்டியதன் அவசி யத்தை இயற்கை நமக்கு இந்த மழை, வெள்ளம் மூலம் கற்றுக் கொடுத்துள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எந்த வேறுபாடும் பார்க் காமல் மக்கள் உதவி செய்துள்ளனர். மனிதநேயமிக்க சமூகம் என் பதையும் இந்த மழை, வெள்ளம் நிரூபித்துள்ளது.

கடந்தாண்டு நீர்நிலை தொடர்பான வழக்கு ஒன்றில் நான் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளைப் பற்றிய சில புள்ளிவிவரங்கள் கொடுத்திருந்தேன். தமிழகத்தில் 34 ஆறுகள் உள்ளன. நான் சிறுவனாக இருந்தபோது ஆறுகளில் தண்ணீர் ஓடுவதைப் பார்த்தேன். ஆனால், இன்று லாரிகளில் மணல் அள்ளப்படும் காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது.

தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 குளங்கள் உள்ளன. ஆனால், அரசு புள்ளிவிவரங்களின்படி 3 ஆயிரத்து 701 குளங்கள் மட்டுமே முழுமையாகப் பாதுகாக்கப் பட்டுள்ளன. 3 ஆயிரத்து 990 குளங் கள் இருந்த சென்னையில் தற்போது 780 குளங்கள் மட்டுமே உள்ளன. 2 ஆயிரத்து 241 குளங்கள் இருந்த திருச்சியில் இப்போது 891 மட்டுமே உள்ளன. குளங்களை எல்லாம் மீட்டு, அவற்றை சீரமைக்க அரசு இதுவரை ரூ.23 ஆயிரத்து 277 கோடி செலவு செய்துள்ளது. இதைக் கேட்டு யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.

மக்கள் ஒன்றிணைய வேண்டும்

அமெரிக்காவில் 507 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஓடும் ஹட்சன் ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி அதில் மின்உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. மக்க ளின் 17 ஆண்டுகால தொடர் போராட்டத்தால் அந்த மின் திட்டம் கைவிடப்பட்டு ஹட்சன் ஆறு காப்பாற்றப்பட்டது. மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் நீர்நிலை கள் காப்பாற்றப்படும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அமெரிக்காவைப் போல தமிழ கத்திலும் மக்கள் சக்தி ஒன்றிணைந் தால் மட்டுமே நீர்நிலைகளைப் பாதுகாக்க முடியும். மக்களை ஒன்றிணைக் கும் முயற்சியாகவே இந்த ‘யாதும் ஊரே’ திட்டத்தை பார்க்கிறேன் என்று நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

‘புதிய தலைமுறை’ குழுமத்தின் தலைவர் சத்யநாராயணன் விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் வாழ்த்துரை வழங்கினார். ‘அகரம்’ அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா ‘யாதும் ஊரே’ திட்டத்தை விரிவாக அறிமுகப்படுத்தி பேசினார்.

‘இன்று புதிதாய் பிறந்தோம்’ என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ‘இணைந்தோம், இணைத்தோம்’ என்ற தலைப்பில் ராஜஸ்தானைச் சேர்ந்த இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் சிறப்புரையாற்றினார்.

பிற்பகல் 2 மணிக்கு, ‘இந்த நிலை மாற்றுவோம்’ என்ற அமர்வில் எஸ்.ஜனகராஜன், ஜி.சுந்தரராஜன், ரஞ்சித் டேனியல், ஜெயஸ்ரீவெங்கடேசன் ஆகியோரும், மாலை 4 மணிக்கு ‘மாற்றமும் மக்களின் பங்கேற்பும்’ என்ற அமர்வில் கோவை சதாசிவம், பியூஷ் மானுஷ், டி. நரசிம்மன், சி.சீனிவாசன் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை ‘தி இந்து’ குழுமம், ‘புதிய தலைமுறை’ குழுமம், அகரம் அறக்கட்டளை, சக்தி மசாலா, ராம்ராஜ், ஓலா, லியோ காபி, ரெப்யூட் பேக்கேஜ்டு குடிநீர் நிறுவனம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x