Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

ரூ.55 கோடியில் மெரினா போல பளிச் என மாறுகிறது ஈசிஆர் பீச்

சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதி கடற்கரையை சுத்தப்படுத்தி அங்கு மக்கள் ஆரோக்கிய மையம், விளையாடும் பகுதி, ஷாப்பிங், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் திங்கள்கிழமை நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் இத்திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதி கடற்கரைகள் மெரினா கடற்கரைக்கு இணையாக சுத்தப்படுத்தப்படுகின்றன. கடற்கரை மட்டுமன்றி அங்குள்ள வீடுகள், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. யோகாசனம், தியான மேடைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், வாக்கிங் பாதை, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, இளைஞர் விளையாட்டுப் பகுதி, நீரூற்று, உயிரியல் பூங்கா, காற்றாடி பறக்கவிடும் பகுதி, திறந்தவெளி தியேட்டர், சாலையோர நாற்காலிகள், மீனவர் படகுதளம், நவீன கழிவறைகள், குப்பைத் தொட்டிகள் என ரூ.55 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதன் வடிவமைப்பு, மாநகராட்சி இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) பதிவேற்றம் செய்யப்படும். மக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை திட்ட வடிவமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள பேட்குரோ நிறுவனத்துக்கு 28170804, 28174026 ஆகிய போன் எண்கள் அல்லது planning@padgro.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். பின்னர் திட்டம் இறுதி ஒப்புதல் செய்யப்பட்டு ஜூலையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, ஆகஸ்ட்டில் பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

200 பேர் பங்கேற்பு

இதுபற்றி மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களிடம் கருத்து கேட்கும் வகையில் கொட்டிவாக்கத்தில் சிறப்பு கருத்துக்கேட்பு கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் திங்கள்கிழமை காலை நடந்தது. 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கொட்டிவாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மாநகராட்சி மூத்த அலுவலர்கள், பேட்க்ரோ நிறுவனத்தினர் விளக்கிப் பேசினர். ஆரோக்கிய மையம், நவீன சாலை செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேட்க்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராம்குமார் கூறும்போது, ‘‘கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் கடற்கரைகளை சுத்தப்படுத்துவதோடு, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மக்கள் ஆரோக்கிய மையம், பொழுதுபோக்கு, ஷாப்பிங் வசதி, கழிவு மேலாண்மை, நவீன சாலைகள் அமைப்பது என்று பல்வேறு திட்டங்கள் இடம்பெறவுள்ளன’’ என்றார்.

சென்னை மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையின் அழகை மேம்படுத்தும் விதமாகவும், கடற்கரை பகுதிகளில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாகவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பலரும் இத்திட்டத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்’’ என்று தெரிவித்தார்.

கொட்டிவாக்கம் ரவி, பாலவாக்கம் சேவியர் ஆகியோர் கூறும்போது, ‘‘உள்கட்டமைப்புகளை சுத்தப்படுத்துவது நல்ல விஷயம். அது எங்கள் வாழ்வாதாரத்துக்கு பிரச்சினையாக மாறிவிடக்கூடாது.

கடற்கரையை சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி இங்குள்ள மக்கள் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது.பல கோடி செலவழித்து கடற்கரையை சுத்தப்படுத்திவிட்டு அப்படியே நின்றுவிடாமல், சென்னை முழுவதும் கடற்கரையை தொடர்ச்சியாக கண்காணித்து சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x