

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத் தில் இருந்து சுமார் 180 விசைப் படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், நெடுந்தீவு பகுதியில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த கே.மணிகண்டன்(37), ஆர்.ராஜேந்திரன்(21), ஜி.மணி(50), சி.கலியமூர்த்தி(20), எம்.பிரபு(15), கே.கோவிந்தன்(50), பி.குணா(40), வி.கார்த்திக்(20), வி.சுதன்(21), எம்.அழகேசன்(19) ஆகியோரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க துணைத் தலைவர் ராமதேவன் கூறும்போது, “புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 விசைப்படகுகள் மற்றும் 23 மீனவர்களை இலங்கை அரசு இதுவரை சிறைபிடித்து வைத்துள் ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பேச்சுவார்த் தையால் எந்தப் பயனும் ஏற்பட வில்லை. இந்த நிலை தொடர்வதால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவே தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.